பக்கம்:கோயில் மணி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கோயில் மணி

“என்ன செய்கிறீர்கள் ? எவ்வளவு பேருக்குச் சமையல் ஆகிறது?” என்று கேட்டார். தாமே இதற்கு ஏற்பாடு செய்தவரைப் போன்ற மிடுக்கோடு அவர் கேட்டார்.

“ஏதோ எங்களால் இயன்றதைச் செய்கிறோம். எங்களிடம் என்ன வசதி இருக்கிறது? பெரிய பாத்திரம் இருந்தால் முன்பே சாதத்தை வடித்திருக்கலாம், பாவம் ! ஏழைகள் காத்திருக்கிறார்கள்” என்று சொன்னார், தொண்டர்களில் ஒருவர்.

“எப்போது சோறு போடுவீர்கள்?” என்று கேட்டார் அந்த கனவான்.

“மூன்று மணிக்குப் போடலாம் என்று எண்ணுகிறோம்.”

“அவ்வளவு நேரமா ? இன்னும் சீக்கிரம் போட முடியாதா?” என்று கனவான் கேட்டார்.

இந்த அதிகாரக் குரலைக் கேட்டபோது தொண்டருக்குக் கோபம் வந்தது; “நீங்கள் யார் தெரிய வில்லையே!” என்றார்,

அரசியல்வாதி சிரித்துக் கொண்டார். “என்னைத் தெரியவில்லையா?” என்று கேட்டார், அவருடன் வந்த ஒருவர், “இவர்தாம் போசல ராவ் உங்களுக்குத் தெரியாதா? இவர் ஒரு தினசரிப் பத்திரிகை நடத்துகிறாரே!”

“ஓகோ சரி சரி” என்று அந்த தொண்டர் தம் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

“அப்படியானல் மூன்று மணிக்கு வந்தால் எல்லாம் தயாராக இருக்குமா?” என்று கேட்டுக் கொண்டே அவர் காரில் ஏறினார். .

‘மூன்று மணிக்கு இவர் இங்கே சாப்பிடவருகிறாரா, என்ன?’ என்று அங்கிருந்தவர்கள் எண்ணமிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/82&oldid=1383955" இலிருந்து மீள்விக்கப்பட்டது