பக்கம்:கோயில் மணி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கண்ணனுக்குக் கால் வலித்தது

நாரதா, வா, இன்று பஜனைக் கோஷ்டிகளையெல்லாம் ஒரு நோட்டம் விட்டு விட்டு வரலாம்” என்றான் கண்ணபிரான்.

“இன்று என்ன இப்படித் தங்கள் திருவுள்ளத்துக்குத் தோன்றியது?” என்று கேட்டார் நாரதர்.

“இப்பொழுது புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பஜனை அமர்க்களமாக இருக்கும். இந்தப் பெரிய பட்டணத்தில் எனக்கு எத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா? எத்தனை பாகவதர்கள், எத்தனை பஜனைகள் இங்கே நடக்கின்றன தெரியுமா? நீயும் பஜனை செய்கிறவனாயிற்றே. அவர்களையெல்லாம் பார்க்க வேண்டாமா?” என்றான் கண்ணன்.

“இப்படியேயா போகிறது?”

“நான் இளைஞனாக வருகிறேன். நல்ல சாரீரத்தோடு பஜனைப் பாட்டுப் பாடுகிறேன். நீ என்னுடன் வயசு முதிர்ந்த கிழவனாக வா. போகிற இடங்களில் ‘இந்தப் பிள்ளையாண்டான் பஜனைப் பாட்டுக்களை நன்றாகப் பாடுவான்’ என்று சிபாரிசு பண்ணு. எங்கேயாவது பாட நேர்ந்தால் நானும் பாடுகிறேன்; நீயும் பாடலாம். ஆனால் நாம் இன்னர் என்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாது” என்றான் மாயக் கண்ணன்.

‘இன்றைக்கு என்ன திருவிளையாடல் செய்யப் போகிறானே கண்ணன்!’ என்ற வியப்போடு நாரதர், “தங்கள் திருவுள்ளப்படி ஆகட்டும்” என்றார்.

கோயில்-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/87&oldid=1383966" இலிருந்து மீள்விக்கப்பட்டது