பக்கம்:கோவூர் கிழார்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மான் முன்பு சொன்னபடி சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன். புலவர்களை அவமதிக்கும் மன்னனை ஒறுப்பதற்குப் புலவரே தடை சொல்வாரா?” என்றான். அவ்வாறு கூறுகையில் அவன் சிறிதே புன்முறுவல் பூத்தான்.

ஆனால் கோவூர் கிழார் கூறிய வார்த்தை அவனுக்கு வியப்பை உண்டாக்கியது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை. “ஆம்; புலவர்களுக்குத் தீங்கு செய்யும் குற்றம் மிகப் பெரியது. ஆனாலும் புலவர்களைவிடப் பெரியவர்கள் குடி மக்கள். அவர்களுக்குத் தீங்கு வராமற் பாதுகாக்க வேண்டும்” என்றார் கோவூர் கிழார்.

இளந்தத்தனாரைச் சிறையிலிட்டதற்காக நெடுங்கிள்ளியிடம் அவருக்குச் சினம் உண்டானது உண்மை. ஆனால் அது குணமென்னும் குன்றேறி நின்றவருடைய வெகுளி அல்லவா? அது உடனே மாறிவிட்டது. நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் மூண்டால் உறையூரில் வாழும் மக்களுக்கும் அவ்வூருக்கும் ஏதும் உண்டாகும் என அஞ்சினார். இந்தப் போருக்கு மூல காரணமாக உள்ள பகைமையை நீக்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று நினைத்தார். ‘இப்படியே இவர்களிடையில் உள்ள பகைமை மறைந்தும் வெளிப்பட்டும் துன்பத்தை உண்டாக்குவதானால் சோழநாட்டின் புகழுக்கும் நன்மைக்கும் கேடு உண்டாகும். இவர்களை எப்பாடுபட்டாவது ஒற்றுமையாக வாழும்படி செய்துவிடவேண்டும்’ என்று அவர்