பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சங்ககாலத் தமிழ் மக்கள்

விலக்கவும் கேளாது, தீப்பாய்ந்து உயிர் நீத்த செய்தி இதனை வலியுறுத்தும்.

கணவன் இறந்தமையால் புதல்வர் முதலிய குடும்பத்தவர்களே வளர்க்குங் கடமையினை மேற்கொண்ட மகளிர், ஒரு நாளைக்கு ஒரு வேளையே உணவருந்திக் கைம்மை நோன்பினை மேற்கொண்டனர். கணவனேயிழந்த நிலையில் ஆதரவற்ற இம்மகளிர், பிறருடைய உதவியினை எதிர் பாராது பருத்திப் பஞ்சினை நூலாக நாற்றுத் தம் குடும்பத்தைப் பாதுகாத்தனர். இவர்கள் தம் குடும்ப வருவாய்க்குரிய தொழிலாக நால் நூற்றலை மேற்கொண்டமையால், 'பருத்திப் பெண்டிர்' என்ற பெயரால் தமிழிலக்கியங்களிற் குறிக்கப் பெற்றனர்.

குழந்தைகளை வளர்த்தல் தாயின் கடமையாகும் தன் பிள்ளைகள் நல்ல உடல் திண்மையும் உள்ளத்திண்மையும் பெற்றுச் சான்றோராக விளங்க வேண்டுமென்பதே தாயின் பெருவிருப்பாகும். பிள்ளைகளின் இளம்பருவத்திலேயே அவர்கள் உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்தலில் தமிழ்த் தாயர் கருத்துடையாராயிருந்தனர்; தம் உயிரனைய தமிழ் மொழியினைத் தம் பிள்ளைகளுக்குத் திருத்தமுறக் கற்பித்தனர்; தெருவில் நடை பழகும் குழவிப் பருவத்திலேயே தம் பிள்ளைகளுக்குச் செந்தமிழ் நடையினைத் தெளிவாகக் கற்பித்தனர்; தாம் கற்பித்த சொற்கள் சிலவற்றை மழலை நாவினாற் குழந்தைகள் கூறக் கேட்டுப் பெரிதும் இன்புற்றனர்; அறத்திற் போர் செய்து வெற்றி பெறுதலும், தம்மிடமுள்ள பொருளை இல்லாதார்க்கு வரையாது வழங்குதலும் ஆகிய நற்செயல்களையே விரும்பி மேற்கொள்ளும்படி தம்மைந்தர்களுக்கு அறிவுறுத்தினர்; குழந்தைகளின் உள்ளம் தீச்செயலிற் செல்லாதபடி தடுத்-