பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

சங்ககாலத் தமிழ் மக்கள்


குரிய பாலெருமையையும், நல்ல பசுவையும், கரிய எருமை நாகினையும் வாங்கினாள்,' என்ற செய்தி பெரும்பாணாற்றுப் படையில் குறிக்கப்படுகின்றது. இதனை உய்த்துணருமிடத்து மகளிரும் ஏற்றுப் போற்றுதற்குரிய நிலையில் பொருள்புரி நூற் புலமை தமிழர் எல்லாரிடத்தும் அமைந்திருந்தமை புலனாம்.

இவ்வாறு பல துறையிலும் கல்வி வளர்ச்சியடையவே, கற்ற நூற்பொருள் பற்றிக் கற்றாரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அவரவரும் தாம் தாம் கருதியனவே உண்மையென நிலை நாட்ட முயன்றனர். இந்நிலையில் பலரும் உடன்பட்டு ஏற்றுக் கொள்ளுதற்குரிய நெறியில் பொருளின் துணிபுணர்த்தும் அளவை நூல்கள் வகுக்கப் பெற்றன. அவ்வளவை நூன்முறையைப் பின்பற்றிச் சான்றோர் பலரும் தம்முட் பொருள் வேற்றுமை கருதி உறழ்ந்து பேசித் தாம் கருதிய பொருளை விளக்க முயன்றனர். இவ்வாறு கல்வித் துறையில் தங்நிகரற்ற புலமை பெற்ற சான்றோர் தம் கருத்தினை நிலை நாட்டக் கருதி, எம்மை உறழ்ந்து கூறுவாருளாரயின் வருக !' எனப் பேரவையிற் கொடி கட்டி அழைத்தலை வழக்கமாகக் கொண்டனர். காவிரிப்பூம்பட்டினத்தில் கல்வித்துறை பற்றிய உறழ்ச்சி குறித்துச் சான்றோர் கொடி கட்டியிருந்தனர்.


'பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ் குறித் தெடுத்த உயர்கெழு கொடி'

என வரும் பட்டினப்பாலை அடிகளால் அத்தகைய கொடியின் இயல்பினை நன்குணரலாம். 'பலவாகிய நூற்கேள்வியினையும், முற்றக் கற்றுச் சொல்லியபடி நடக்கும் பழைய ஆணை மொழியினையுமுடைய கல்லாசிரியர்கள் வாது செய்-