பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்வி நிலை

117

யக் கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடி' என்பது மேற்காட்டிய அடிகளின் பொருளாகும்.

இரட்டித்த கதிர்களையுடையதாகி விளைந்த திணையின் தோற்றத்தை விளக்க வந்த புலவரொருவர், தருக்க நெறியினைப் பின்பற்றிப் பொருளை விளக்கிக் காட்டுபவன் கையிடத்து இரு பிரிவாக இணைந்த விரல்களை உவமையாகக் கூறி விளக்குகின்றார் (மலைபடு.) இவ்வாறு நூற் பொருள்களை விளக்குதற்குச் சொல்வன்மை இன்றியமையாததாகும். ஒருவன் தன் உள்ளக் கருத்துக்களைத் தங்கு தடையின்றிச் சொல்லால் வெளிப்படுத்தும் மொழிப் பயிற்சியே சொல் வன்மை எனப்படும். 'தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் அறியும்படி விரித்துரைக்கும் சொல் வன்மை இல்லாதவர், நன்றாக மலர்ந்தும் மணங்கமழாத மலரைப் போன்று பயன்படாதவராவர்', என அறிஞர் கூறுவர். ஒருவன் தான் கூறக் கருதிய பொருள்கள் பிறரால் உணர்ந்து கொள்ளுதற்கு அரியனவாயிலும், கேட்பார்க்கு எளிய பொருளாக மனத்திற் பதியும்படி தெளிவான சொற்களால் விளக்கியுரைத்தல் வேண்டும். பிறர் கூறுகின்ற பொருள்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள இயலாத அரிய பொருள்களாயினும், அவர் கூறும் சொற்களின் நுண்ணிய பொருள்களை உய்த்துணர்ந்து காணுதல் வேண்டும். தான் கற்றவற்றைப் பிறர்க்கு விளங்க உணர்த்தும் முறையும், பிறர் கூறுவனவற்றைத் தான் விளங்க உணரும் முறையுமாகிய இவ்விரு திறனுமுடையதே அறிவு என ஆசிரியர் திருவள்ளுவர் இலக்கணங் கூறுகின்றார்.

'ஒருவருடைய அறிவின் மாட்சியினை விளங்க உண்ர்த்தும் கருவியாவன, அவர்தம் வாய்ச் சொற்களே', என