பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் தொழில் நிலை

131



துணைகொண்டு கடல் வழியாகவும் பெரும்பொருளை ஈட்டித் தருதலால், எல்லாத் தேயங்களிலும் உள்ள பொருள்கள் ஒருங்கு சேர்ந்தாற்போன்ற பண்டங்கள் உலகம் முழுவதும் வந்தாலும் கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாத வண்ணம் நிறைந்திருந்தன எனச் சிலப்பதிகாரமும், பட்டினப்பாலையும் குறிப்பிடுகின்றன. இங்ஙனம் தங்கள் வினைத்திறத்தால் நாடெங்கும் சென்று வாணிகம் புரிந்து பெரும்பொருள் தொகுத்த வணிகர்கள் பெருஞ் செல்வத்தால் அரசரோடு ஒப்ப வைத்து மதிக்கும் பெருஞ் சிறப்பினைப் பெற்று விளங்கினார்கள். 'மன்னர் பின்னோர்' என அரசரையடுத்துப் பாராட்டுஞ்சிறப்புத் தமிழ் நாட்டு வணிகர்களுக்கு உரியதாயிற்று.

மக்கள் வாழ்க்கைக்கு உணவு, உடையினைப் போன்று சிறப்பாக வேண்டப்படுவது உறையுள் ஆகும். மழை, பனி, வெயில் என்பவற்றால் உளவாகும் இடர்களை விலக்கி, இன்புற்று வாழ்தற்குரிய வசதியினைத் தருவது இவ்வுறையுளேயாகும். வைக்கோல் முதலிய புல்லால் வேயப்பட்ட சிறு குடில் முதலாக, அண்ணாந்து நோக்க இயலாதபடி உயர்ந்து தோற்றும் எழுநிலை மாடம் ஈறாகப் பல திறப்பட்ட கட்டிடங்களையும் திறம்பட அமைக்கும் கட்டிடக் தொழிலிற் சங்ககாலத் தமிழ் மக்கள் சிறந்து விளங்கினார்கள். நக்கீரனார் என்னும் புலவர் தாம் பாடிய நெடுநல் வாடை என்னும் பாட்டில் கட்டிட நூலிலை நன்குணர்ந்த சிற்பிகள் நிலத்தினைக் கயிறிட்டு அளந்து பெரும்பெயர் மன்னர்க்கு ஏற்ப மாளிகையினை அமைத்த தொழிற் திறத்தை விரிவாக விளக்குகின்றார். மலையை நடுவிலே திறந்தாற் போன்ற உயர்ந்த கோபுர வாயில்களும், மக்கள் பருவநிலைக்கேற்ப இன்பம் நுகர்தற்குரிய நிலா முற்றம்.