பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் தொழில் நிலை

133

 முதலியன செய்பவர் 'கஞ்சகாரர்’ என வழங்கப்பட்டனர். செம்பினால் கலம் செய்வார் 'செம்பு கொட்டிகள்' எனப்படுவர். இரும்பினைக் காய்ச்சி அடித்து வலிய தொழில் செய்வார் 'கொல்லர்'என வழங்கப்பட்டனர். கண் கவரும் ஒவியங்களை எழுதவல்லவர் 'கண்ணுள் வினைஞர்' எனக் குறிக்கப்பட்டனர். ஒவியத்தினை எழுதுதற்குரிய பல நிறங்களும், எழுதுகோலும், இலக்கியங்களிற் பேசப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் புராண வரலாறுகளைக் குறித்த ஒவியங்கள் பல எழுதப்பட்ட சித்திரமண்டபமொன்று 'எழுதெழில் அம்பலம்' என்ற பெயரால் பரிபாடலிற் பாராட்டப் பெறுகின்றது.

கதையினாலே பதுமை முதலியன செய்து வாழ்பவர் ‘மண்ணிட்டாளர்' என வழங்கப்பெற்றனர். அருமைப் பாடுடைய வினைத்திறம் அமையப் பொன்னினால் பலவகை அணிகலங்களைச் செய்பவர் ''பொற்கொல்லர்’ எனப்படுபவர். பொன்னிலே நல்ல மணிகளைப் பதிக்கும் இயல்பறிந்து அணிகலனமைக்கும் இரத்தினப் பணித் தட்டார்களும், தமிழ் நாட்டிற் பெருக வாழ்ந்தார்கள். திருமணி குயிற்றுநர் என்பார் முத்துக் கோப்பவராவர். ஆடையினால் மெய்ப்பை (சட்டை) முதலாயினவற்றை அழகு பெறத் தைக்குத் தொழில் வல்லவர் 'துன்னகாரர்' என வழங்கப் பெற்றனர். தோலினாலே செருப்புத் தைத்தலும் கட்டில் முதலியன பின்னுதலும் ஆகிய தொழிலைச் செய்தவர் 'தோலின் துன்னர்’ என்ற பெயரால் வழங்கப்பட்டனர். துணியினாலும், கெட்டியினாலும் பறவை, பூ, வாடா மாலை, கொண்டை முதலிய கண்கவர் பொருள்களைச் செய்யும் வனப்பமை சிறுதொழில்கள் தமிழ் மக்களால் ஆதரித்து வளர்க்கப் பெற்றன.