பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

47



னுடைய நல்லறச் செயலைப் பாராட்டி மகிழ வேண்டுமென எண்ணித் தானும் ஒரு பரிசிலன்போல அவனுடைய சிறுகுடிக்குப் புறப்பட்டுச் சென்று, அவ்வூரின் எல்லையை அடைந்தான். புது வருவாயையுடையதாகிப் பழுத்தமரத்தின்கண்ணே பறவைக்கூட்டம் ஒலித்தாற்போன்று பண்ணனது மனையிற் பெருந்திரளாகக் கூடியுண்ணும் மக்களின் ஆரவாரம் அவ்வூருக்கு நெடுந்தொலைவிலேயே கேட்டது. மழை பெய்யுங் காலத்தை முன்னறிந்து தம் முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு செல்லும் சிறிய எறும்புகளின் வரிசையைப் போன்று, பண்ணன் வீட்டில் பெரிய சுற்றத்தினருடன் கூடியுண்ட சிறு பிள்ளைகள் அடுத்த வேளைக்குப் பயன்படும்படி தங்கள் கைகளிலே சோற்றுத் திரளைக் கொண்டு செல்லும் அழகிய தோற்றத்தினைக் கிள்ளி வளவன் தன் கண்ணாரக் கண்டான். பண்ணன் இரவலர்பால் வைத்த அருளுடைமையை எண்ணி மனமுருகிய மன்னன்.; “யான் உயிர் வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக!” என வாழ்த்தினான் [1]. ஒருவருடைய இயல்புகளையெடுத்து வாழ்த்துவோர், ‘ஆயிரம் வெள்ளம் வாழ்க!’ என்றது போலத் தம் மனம் விரும்பிய அளவு வாழ்த்துதல் உலகியலிற் பெரும்பாலும் நிகழும் வாழ்த்தியல் முறையாம். மக்கள் கருவாய்ப் பதிகின்ற அன்றே அவர்களுக்குரிய வாழ்நாளும் வரையறை செய்யப்பெற்றதாதலின், அதற்கு, இழலும் பல்லாண்டுகள் வாழ்கவென வாழ்த்துதல் பொருந்தாதெனவுணர்ந்த புலவர் சிலர், “ஊழால் நினக்கு வரையறுக்கப்பட்ட நாள் முழுதும் இனிதாக இருப்பாயாக” என வாழ்த்துதலும் உண்டு. இவ்விருவகை


  1. புறம் 173