பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சங்ககாலத் தமிழ் மக்கள்

டன. இவ்விளக்கிற்குக் ‘கலங்கரை விளக்கம்’ என்பது பெயர். ‘கப்பலை அழைக்கும் விளக்கு’ என்பது இத்தொடரின் பொருளாம். இத்தகைய கலங்கரை விளக்கங்கள் காவிரிப்பூம்பட்டின்த்திலும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன.

தம் காட்டில் தமக்குப் பயன்பட்டு மிகுந்த பொருளை வெளி நாட்டிற்கனுப்பியும், வெளி நாட்டிலிருந்து தமக்குப் பயன்படும் பொருளை இந்நாட்டிற்குக் கொண்டு வந்தும் வாணிகஞ் செய்தற்கு இக்கடல் வழிப் போக்கு வரவு மிகவும் பயன்படுமுறையினை முதன் முதற்கண்டுணர்ந்தவர்கள் நம் தமிழ்மக்களே. யவனருடைய கப்பல்கள் தமிழ் நாட்டு மேலைக் கடற்கரையிலுள்ள முசிறியில் பொன்னை நிறையக் கொண்டு வந்து இறக்கிவிட்டு, மிளகினை நிறைய எற்றிச் சென்றன என ஒரு புலவர் கூறுகின்றார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் பல நாட்டு வணிகரும் ஒருங்கிருந்து வாணிகம் செய்தனர். நீரின் வந்த குதிரைகளும், தரை வழியாய் வந்த மிளகு மூடைகளும், இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருள்களும், காழகத்திலிருந்து வந்த பொருள்களும், இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட மணியும் பொன்னும், குடமலையிலிருந்து கொணர்ந்த சந்தனமும் அகிலும், கங்கை நீரால் விளைந்தனவும் காவிரியால் விளைந்தனவுமாகிய பல்வகை உணவுப் பொருள்களும் அந்நகரத்தில் வந்து குவிந்தன,’ எனவும், ‘உலகமாந்தர் ஒரு சேர வந்தாலும் கொடுக்கக் குறைபடாதனவாய் நிறைந்திருந்தன’, எனவும் பட்டினப் பாலை என்னும் பாட்டுக் கூறுகின்றது.

நாட்டில் ஊர்தோறும் திருவிழாக்கள் நிகழும். இவை பெரும்பாலும் ஒவ்வொரு திங்களிலும் நிறைமதி நாளை