பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சங்ககாலத் தமிழ் மக்கள்



யன்றி, அரசர்க்குப் பிறந்த நாள் விழாவும், முடி சூட்டு விழாவும், அறநெறியிற் போர் செய்து துறக்கம் புக்க வீரர்களுக்குக் கல் நிறுத்தி அதன்கண் அவர்தம் பெயரும் வெற்றிப் பெருமையும் எழுதி அவர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் நடுகல் விழாவும், இவ்வாறே கற்புடைப் பெண்டிரை வழிபடும் நடுகல் வழிபாடும் சிறப்புடைத் திருவிழாக்களாக மதிக்கப்பெற்றன.

மலை நாட்டு மக்கள் முருகனையும், முல்லை நிலத்துப் பொதுவர் திருமாலையும், பாலைநிலத்தவர் கொற்றவையையும், மருதநிலத்தவர் வேந்தனையும் (இந்திரன்), நெய்தல் நிலத்தவர் வருணனையும் சிறப்பு முறையில் தம் நிலத்திற்குரிய தெய்வங்களாக விரும்பி வழிபட்டனர். இவ்வாறு நிலவகையால் பல தெய்வங்கள் கொள்ளப்பட்டாலும், ‘வேறு வேறு பெயரால் வழிபடப் பெறும் எல்லாத் தெய்வங்களும் ஒன்றே,’ என்னும் உண்மையினைத் தமிழ் மக்கள் தெளிய விளக்கியுள்ளார்கள்.

“ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரின்
எவ்வயி னோயும் நீயே.”

என ஒரு புலவர் திருமாலைப் போற்றுகின்றார்.

ஆற்றிலும், குளத்திலும், நாற்றெருக்கள் கூடுமிடத்தும், இரண்டு மூன்று பெருவழிகள் சந்திக்குமிடத்தும், புதிய பூக்களப்பூத்து மணங்கமழும் கடம்பு ஆல் முதலிய மரங்களின் நிழலிலும், மலைகளிலும், மக்களால் செய்யப்படும் பல திற வழிபாடுகளும் உலகப் பெருமுதல்வனாகிய ஒருவனையே குறித்து நிகழ்வன என்பது தமிழர் உட்கோளாகும். இக்கருத்தினால் நிலந்தோறும் தாம் கற்பித்துக்