பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழர் வாழ்வியல்

61

தார்கள். சோழர் வழியினராகிய திரையர் என்பவரால் ஆளப்பெற்ற தொண்டைநாட்டின் தலைநகர் காஞ்சியாகும். அரசர்க்குரிய இத்தலைநகரங்கள் மதில் முதலிய அரண்களுடன் நகர அமைதிக்கேற்ப அரசர் வாழும் உயர்ந்த அரண்மனையினை நடுவே பெற்று, பெருஞ்செல்வர்களும் பல திறப்பட்ட தொழிலாளர்களும் படை வீரர்களும் தங்குதற்குரிய பல்வேறு தெருக்கள் வரிசையாகச் சூழப் பெற்றனவாய்க் கடவுளர் திருக்கோயில்களும் பொது மன்றங்களும் சோலைகளும் வாவிகளும் ஆகியவற்றைத் தம்மகத்தே கொண்டு விளங்கின. இந்நகரங்களில் மக்கள் உடல் நலத்துடன் வாழ்தற்கேற்றபடி அழுக்கு நீரினை வெளியே கொண்டு செல்லும் கால்வாய்கள் நிலத்தின்கண்ணே மறைவாக அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அமைக்கப்பெற்ற கால்வாயினைக் 'கரந்து படை' என வழங்குவர்.

'தாமரைப் பூவினேயொத்த அமைப்புடையதாய் மதுரை நகரம் விளங்கியது. அப்பூவிலுள்ள இதழ்கள் அடுக்கடுக்காகச் சூழ்ந்திருத்தல்போல, மதுரை நகரத்தின் தெருக்கள் பல்வேறு வரிசைகளாய்ச் சூழ அமைக்கப்பட்டன. தாமரையின் நடுவேயமைந்த பொகுட்டினைப் போன்று பாண்டியனது அரண்மனை மதுரையின் நடுவே சிறந்து தோன்றியது. அவ்வூரில் வாழும் தமிழ் மக்கள் தாமரை மலரிலுள்ள மகரந்தப் பொடியினைப் போன்று தேனின் இன்சுவையும் நறுமணமும் உடையவர்களாய் விளங்கினர்கள். அங்கு வாழும் தமிழ் மக்களது புகழ், மணத்தால் ஈர்க்கப்பட்டு அந்நகத்தையடைந்த புலவர் பாணர் முதலியோர், தாமரையின் மணத்தால் தேனுண்ண வந்த வண்டினத்தையொத்து விளங்கினர்,' எனப் பாரி.