பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

63

நகரங்களில் அமைக்கப்பட்டன. இந்நகரத்தில் நிகழும் திருவிழாக்களில் பல சமய அறிஞர்களும் கலந்துகொண்டு, தம் சமய நுண்பொருள்களை இகலின்றி விரித்துரைத்தார்கள். நகரமக்கள் தங்களிடையே சமயப் பிணக்குத் தோன்றாதபடி எல்லாரிடத்தும் கருத்து வேற்றுமையின்றி அன்பினாற் கலந்து பழகினார்கள்.

பெருஞ்செல்வர்கள் எழு நிலை மாடங்களில் இனிது வாழ்ந்து வந்தார்கள்; சுவைக்கினிதாகிய அடிசிலை இரவலர்க்களித்துத் தாமும் உண்டு மகிழ்ந்தனர்; நிலாப்பயன் நுகரும் நெடுநிலா முற்றமும், தென்றல் வீசும் வேனிற்பள்ளியும், கூதிர்க் காலத்து வாடை புகாத கூதிர்ப்பள்ளியும் ஆகிய வாழ்க்கைச் சூழல்களைத் தம் மனையின்கண்ணே நன்கு அமைத்துப் பருவ நிலைகளுக்கேற்ற உறையுளும் உணவும் பிற வசதிகளையும் அமைத்துக்கொண்டு, தம் ஆள்வினைத் திறத்தால் இவ்வுலகத்தை இன்பமே நுகரும் தேவருலகாக மாற்றிவிட்டனர்.

தமிழ் வேந்தர் தம் நாட்டின்கண் வழிப்போவார்க்குரிய இடையூறுகளை விலக்கி, எல்லாரும் போக்கு வரவு புரிதற்குரிய பெருவழிகளை அமைத்து, அவ்விடங்களில் விலங்குகளாலும் கள்வர் முதலிய தீயவர்களாலும் துன்பம் நேராதபடி படை மறவர்களை நிறுவிக் காத்தனர். பலவூர்களுக்குச் செல்லும் வழிகள் ஒன்று கூடி மயங்குதற்குரிய கவர்த்த வழி, 'கவலை’ எனப்படும். இவ்வாறு பல வழிகள் கூடிய நெறியிற்செல்வார் தாம் செல்லும் ஊருக்குரிய வழி இன்னது எனத் தெரிந்துகொள்ள இயலாது மயங்குத லியல்பு. வழிப்போவார் இவ்வாறு மயங்கி இடர்ப்படுதலாகாதென் றெண்ணிப் பண்டைத் தமிழர்