பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
IV
பெண்டிர் நிலை

அழகினாலும், அன்பு அருள் முதலிய பண்பினாலும் விரும்பத் தக்க தன்மை பெண்மையாகும். ஆடவர்களால் விரும்பிப் போற்றத் தக்க அன்பு, அடக்கம், அமைதி முதலிய நற்பண்புகளும், அப்பண்புகளுக்கேற்ற உடல் வனப்பும் உடையவரே பெண்டிர் எனப் போற்றப் பெறுவர். கண்ணிறைந்த பேரழகினால் உளங்கவரும் நங்கையைக் 'காரிகை' என வழங்குதல் உலகியல். ஆடவர்களால் காதலிக்கத் தகுந்த காதல் மிக்க மகளிர் 'மாதர்' என வழங்கப் பெற்றனர். ஐம்பொறிகளால் நுகர்தற்கினிய மென்னீர்மை மகளிரின் சிறப்பியல்பாகும். மகளிர்பாற் காணப்பெறும் மென்னீர்மையினைச் ‘சாயல்’ என்பர். சாயலாகிய மென்மையினைத் தம் இயல்பாகப் பெற்றமையால், 'மெல்லியலார்' என்ற பெயர் மகளிர்க்கு உரியதாயிற்று.

ஆடவர் அச்சமின்றி நாடெங்குஞ் சுற்றித் திரிந்து இயற்கையாலுளவாகும் இடையூறுகளை எதிர்தது நின்று வினை செய்தல் போலப் புறத்தொழிலிற்கலந்துகொள்ளும் விருப்பம் பெண்டிர்க்கு இயல்பன்றாம். மகளிரது உடலமைப்பு வலிய தொழில்களைச் செய்தற்கு ஏற்றதன்று. உடலின் திண்மை பெறாத மெல்லியலார் விலங்கு முதலியவற்றால் உலகியலில் நிகழும் இடையூறுகளை எதிர்த்து நிற்றற்குப் போதிய ஆற்றலுடையாரல்லர். துன்பந்தரும் இடர் நெறிகளிற்செல்லாது ஒதுங்கி நின்று தம் உள்ளத்து அமைதியால் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் பெண்டிரின் திறமையாகும்.

அச்சம், நாணம், மடம் என்பன பெண்டிர்க்குரிய குணங்களாம். மகளிரது உள்ளத்தில் குறிப்பின்றித்