பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சங்ககாலத் தமிழ் மக்கள்

குறிப்பினை உற்று நோக்குங்கால், பண்டைக் தமிழ் மகளிர் பாடிய இசை, கொடிய விலங்குகளையும் அமைதியுறச் செய்யுங் திறமுடையதென்பது நன்கு தெளியப்படும். போரிற்புண்பட்ட தம் கணவரது நோயினைத் தாம் பயின்ற இன்னிசையாகிய மருந்தினால் மகளிர் தணிவித்த செய்தி புறப்பாடலொன்றிற் (281) கூறப்பட்டது.

சங்ககாலத் தமிழ் மகளிர், நாடகத் தமிழிலும் நல்ல பயிற்சி பெற்று விளங்கினர். உள்ளக் குறிப்பினைத் தம் உடம்பிற்றோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படுத்தும் முறை நாடகத்தின் பாற்பட்டதாகும். இம்முறையினை 'விறல்' என்ற சொல்லாற் குறிப்பிடுவர். விறல்பட ஆடுந்திறம் மகளிர்க்கே உரியதாகும். விறல்பட ஆட வல்லவள் 'விறலி’ என வழங்கப் பெற்றாள்.

உள்ளத்திற்கு உவகையளிக்கும் நுட்பத் தொழில்களைக் கலையென்ற சொல்லால் வழங்குதல் மரபு. கவின் கலைகளைப் பயிலுதற்குச் சிறப்புரிமையுடையார் மகளிரேயாவர். ஆடலும் பாடலும் அழகும் அமைந்து, தாம் கற்று வல்ல கலைத்திறத்தால் மனை வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி மகிழ்வளிக்கும் திறன் மகளிரது மதிநலமாகும். யாழும் குழலும் ஆகிய இசைக் கருவிகளை வாசித்தல், பந்தெறி களத்தில் நின்று திறம் பெறப் பந்தாடுதல், அமிழ்தனைய உணவமைக்கும் சமையற்றொழிலிற் பழகுதல், உடம்பிற் பூசுதற்குரிய நறுமணப் பொடியினை அமைத்தல், பருவநிலைக்குப் பொருந்த உணவு முதலியவற்றை அமைத்தொழுகுதல், பிறர் உள்ளக் கருத்தினக் குறிப்பினாலறியும் திறம் பெறல், தாம் எண்ணிய கருத்துக்களை மொழிநடையிற் பிழையின்றித் தொடுத்துக்கூறும் சொல் வன்மை பெறுதல், கண்களைக் கவரும் ஓவி-