பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்டிர் நிலை

91

யம் வரைதல், மலர் மாலை தொடுத்தல், கணக்கும் சோதிடமும் முதலிய நூற்றுரைகளை அறிதல் என்பன மகளிர் சிறப்பாகப் பயிலுதற்குரிய கலை விகற்பங்களாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி விளக்கும் கலைகள் பலவற்றையும் தமிழ் மகளிர் ஐந்தாம் வயது நிரம்பிப் பன்னிரண்டாம் வயது முடியவுள்ள ஏழாண்டுகளிலும் நன்றாகக் கற்றுணர்ந்தனர்.

கலை வளம் பெற்ற மாதர்கள், தாங்கள் இடைவிடாது போற்றுதற்குரிய நாணமும் கற்பும் அன்பும் அருளும் முதலிய நற்பண்புகளைத் தங்கள் உள்ளத்தில் நிலைபெற வளர்த்தும், தங்களே அணுகாது தடுத்தற்குரிய குற்றங்களை அறவே விலக்கியும், தங்களைத் தாங்களே நிறையினாற் காவல் செய்து ஒழுகினார்கள் : அரிய வினைகளைச் செய்து முடித்தற்கேற்ற வினைத்திறமும், அன்பும், அறிவும், வீரமும் முதலாகிய நற்பண்புகளும் நல்லொழுக்கமும் வாய்ந்த ஆண் மகனையே மணந்துகொண்டார்கள். முல்லை நிலத்தில் வாழும் ஆயர்கள் தங்களால் வளர்க்கப் பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் ஆற்றலுடையானுக்கே தங்கள் மகளிரை மணஞ்செய்து கொடுத்தார்கள். 'கொல்லுந்தொழிலையுடைய காளைகளின் கொம்பின் கொடுமையினை நினைந்து அஞ்சும் இயல்புடையானை ஆயர் குலப் பெண் மறுபிறப்பிலும் மணந்துகொள்ள விரும்ப மாட்டாள்,'[1] எனச் சோழன் நல்லுருத்திரனார் என்னும் புலவர் பெருமான் கூறும் மொழி அக்காலத் தமிழ் மகளிரின் விருப்பத்தினை நன்கு வெளிப்படுத்துவதாகும். மகளிரை மணந்துகொள்பவர் அம்மகளிர் அணிதற்குரிய அணிகலன்களுக்கெனப் பெரும்பொருளைப் பரிசமாகக் கொடுப்பது அக்கால வழக்கமாகும். பரிசப் பொருளை


  1. கலி. 103