பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

சங்ககாலத் தமிழ் மக்கள்



விரும்பித் தகுதியில்லாதானை மணந்துகொள்ளும் வழக்கத்தினைத் தமிழ் மகளிர் வெறுத்து விலக்கினர். ‘நன்மை அமைந்த பெரும்பொருளைப் பரிசமாகக் கொடுப்பினும், உயர்ந்த தகுதியில்லாதானை என் மகள் மணந்துகொள்ள மாட்டாள்’ என்று சொல்லித் தந்தையொருவன் பெண் கொடுக்க மறுத்த செய்தி புறநானூற்றுப் பாடலொன்றிற் கூறப்படுகின்றது [1].'

கணவனது வாழ்க்கைக்குத் துணையாய் நின்று அன்பினால் ஒன்றி வாழும் மகளிர், வாழ்க்கைத் துணையெனப் பாராட்டப் பெற்றனர். மனையின்கண் இருந்து மனையறம் நிகழ்த்தும் உரிமை மகளிர்க்கே வழங்கப் பெற்றது. அதனால், ‘மனைவி, இல்லாள்’ என்ற பெயர்கள் பெண்களுக்கு உரியவாயின. இவ்வாறு மனையின் உரிமையினைக் குறித்தற்குரிய பெயர்கள் ஆண் பாலார்க்கு வழங்காமையால், மனையறக் கடமைகளில் மகளிரே பொறுப்புடையராய் விளங்கினர் என்பதை அறியலாம். பல்வேறு தொழில்களிற் கருத்துடையராய் இடைவிடாது வினை செய்து உழலும் ஆடவர்களை வினை முடிவின்கண் வீட்டில் அமைதியாகத் தங்கியிருக்கச் செய்து மனை வாழ்க்கைக்கு விளக்கம் தருவார் மகளிரேயாவர். இவ்வாறு மனை வாழ்க்கையிற் பொலிவினைத் தரும் மனைவியை "மனைக்கு விளக்காகிய வாணுதல்"[2] எனப் புலவரொருவர் பாராட்டிப் போற்றுகின்றார்.

தன்னால் தொழப்படும் தெய்வம் வேறு, தன் கணவன் வேறு என்று கருதாமல், கணவனையே வழிபடுதெய்வமாகக் கருதி, அன்பினால் அடங்கியொழுகுதல் பண்டைத் தமிழ் மகளிரின் பண்பாகும். உறக்கத்தினை விட்டு எழுதற்குரிய விடியற்காலையில் தெளிந்த சிந்தையுடன் வழிபடு


  1. புறம் 343
  2. புறம் 314.