பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போவோம். போகும்போது மற்றொரு தடவை குகையின் பாறைச் சுவர்களை நன்றாகப் பார்த்து விடுவோம்” என்று தங்கமணி கூறினான்.

“புதையல் எல்லாம் வெறும் கதை. கண்ணகிக்கு வைர மூக்குத்தி போச்சு” என்றான் சுந்தரம்.

“போடா அசடு - இந்தக் காலத்திலே யார் மூக்குத்தி போடுகிறார்கள்? அதிகமாக நகை அணிந்து கொள்வதே அநாகரிகம் - அதோடு புதையல் கிடைத்தால் அது அரசாங்கத்திற்குச் சேரவேண்டியது. நீயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே” என்று கண்ணகி முடிப்பதற்கு முன்னே “ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டாய். புதுமைப் பெண் வாழ்க” என்றான் சுந்தரம்.

தங்கமணி இவர்களுடைய பேச்சையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவன் டார்ச் விளக்கைப் போட்டு இரண்டு பக்கத்திலுமுள்ள குகையின் பாறைச் சுவர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தான். சில இடங்களில் அங்கே கிடந்த சிறு கல்லைக் கொண்டு கீறிப் பார்த்தான்; தட்டித் தட்டியும் பார்த்தான்.

ஓரிடத்திலே பாறையிலே செங்கல் சுவர் வைத்திருந்தது. அதுவும் பாறையோடு பாறையாய் ஒரே கருப்பாகத் தோன்றினாலும் செங்கல் என்பதைத் தங்கமணி கண்டு கொண்டான்.

“இங்கே பார். இங்கே எதற்குச் செங்கல் சுவர் வைத்திருக்கிறார்கள்?” என்று தங்கமணி தன் உள்ளத்தில் தோன்றிய சந்தேகத்தை வெளிப்படையாகப் பேசினான்.

“திப்புசுல்தானைக் கேள்” என்றான் சுந்தரம்.

“அடடா இன்னும் ஒரு பெரிய ஜோக்” என்று கண்ணகி நகைத்தாள்.

31