பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩. ௪. எழுத்தாளன் சேந்தன் பூதனார்

அரசரிடும் கட்டளைகளை எழுதும் தொழிலுடையார் எழுத்தாளர் எனப்படுவர்; “கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன், மண்ணுடை முடங்கல் அம் மன்னவர்க்களித்து” (சிலம்பு: ௨௬ : எக-க) எனவும், “ஏட்டின்மேல் நீட்டித் திருவெழுத்திட்டு அங்கு இறைவனும் தமர்களைப் பணிப்பு” (சிந்தாமணி : ௨கக௦) எனவும் வருவன காண்க. இதனால், பூதனாரோ, அன்றி, அவர் தந்தையார் சேந்தனாரோ, பாண்டிய அரசர்பால் திருமுகம் எழுதும் தொழில் மேற்கொண்டு வாழ்ந்தவர் என்பது புலனாம். இவர் பெயர் மதுரை எழுத்தாளன் என்ற அளவிலேயே வழங்குவதும் உண்டு.

உப்பு வணிகர், கீழ்க்கடல் அருகே உப்பளங்களைத் தோற்றுவித்து, அவற்றில் உவர்க்கும் கடல்நீரைத் தேக்கி ஞாயிற்றின் வெப்பத்தால் நீர் காய்ந்து போக உண்டான வெள்ளிய உப்பினை விற்றுவரற்பொருட்டு, மேற்குத் திசையில் உள்ள நாடுகளுக்குக் கொண்டு செல்ல, அவற்றைப் பொதிகளில் நிரப்பி, அப்பொதிகளை வெண்ணிறக் கழுதைகள் மேல் ஏற்றிக்கொண்டு, வழியில் ஆறலைகள் வரினின்றும் தம்மைக் காத்தற்பொருட்டுப் படைகளையும் எடுத்துக்கொண்டு, புறப்படுதற்காம் நல்லநாள் நோக்கிப் போவர்; பொதிச்சுமை தாங்காத கழுதைகள், குளம்புதேய நிலத்தை உதைத்து நடந்து செல்லும் என அவர் கூறும் பகுதியால், அக்கால மக்கள் மேற்கொண்ட வாணிப வாழ்க்கையும், அவ்வுணிகர்க்கு வழியில் உண்டாம் ஏதமும், அவ்வேதம் நீங்கப் படைகொண்டு செல்லும், பண்பும் முதலாயின ஒருவாறு விளங்குதல் காண்க.

“அணங்குடை முந்நீர் பரந்த செறுவில்,
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மரர், புள் ஓர்த்துப்,
படையமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்
நீரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்

குறைக்குளம்பு உதைத்த கல்பிறழ் இயவு.” (அகம்: ௨௦௭ )