பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்தாளன் சேந்தன் பூதனார்

107

இடைவழியில் நீர்வேட்கையுற்று, அது தணிக்கும் நீரை எங்கும் தேடி அகப்படாமையால், தண்ணீர் வேண்டிய யானை, தன் கைவிட்டுத் துழாவிய வறுங்கிணற்றுள், அத் தலைமகன் இறங்கித் தோண்டச், சிறிது ஊறிய உவர்ப்பு மிக்க நீரை, ஆண்டு நீர் அதிகம் இன்மையால் குறைக்குடமாக முகத்து, வெப்பத்தால் பெருமூச்சுத் தோன்றக் குடித்து வியர்த்துத் தளர்வளே ; அந்தோ! அதை நினைந்து எங்கனம் ஆற்றுவேன்? எனத் துயர் உற்றாள் தாய் என்று கூறும் அவர் பாடற்பொருளை கோக்குக.

“நீடுமருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெருங்கை புரண்ட கூவல்
தெண்கண் உவரிக் குறைக்குட முகவை
அறனி லாளன் தோண்ட வெய்துயிர்த்துப்
பிறைநுதல் வெயர்ப்ப உண்டனள் கொல்லோ!
தேங்கலந்து அளை இய தீம்பால் ஏந்திக்
கூழை உளர்ந்து, மொழிமை கூறவும்
மறுத்த சொல்ல ளாகி
வெறுத்த பள் ளமொடு உண்ணா தோளே.”

(அகம் : ௨௦எ)

செல்வவாழ்வில் சிறக்க வாழ்ந்தவர், பின்னொருகால், தம் செல்வ வாழ்விழந்து வறுமையுற்றுத் துயர் உறும் காலத்தே, பண்டு தாம்வாழ்ந்த சிறந்த வாழ்வை எண்ணி எண்ணி ஏங்கும் இயல்பினராவர் என்பதைப், புலவர், தலைவன் பிரிவால் தனித்து இருந்து துயர் உற்றுத் தன் நலன் இழந்த ஒரு பெண், தன் தோழிபால் “தோழி! தலைவன் உறவினைப் பெறுவதற்கு முன் யான் நலம் பல பெற்றுச் சிறப்புற்றிருந்தேன் ; என் கண்கள் தாமரை மலரை ஒத்து மாண்புற்றிருந்தன ; வேய்போல் வனம் பெய்தி இருந்தன என் தோள்கள் ; பிறையின் வடிவுடையதாகி, கண்டார் அறிவினைக் கலக்கும் கவினுடையதாயது என் நுதல்; ஆனால் அந்நிலை இன்று அழிந்துவிட்டதே!” எனக் கூறித் துயர்உற்றாள் எனப் பாடிய் (குறுங் ௨௨௪) புலப்படுத்தியுள்ளார்.