பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௫. எழுஉப்பன்றி நாகன் குமரனார்

நாகன் என்ற பெயர் பொதுவாகக் குறிஞ்சி நில மக்கள் மேற்கொள்ளும் பெயராம், குறிஞ்சிநில மக்கள் முருகவேளை வழிபடு கடவுளாகக் கொண்டவர் ; முருகனுக்கு உரிய பெயர்களுள் குமரன் என்பதும் ஒன்று ; இதனால் இவர் குறிஞ்சி நிலத்து வேடர் வழிவந்தவராவர் என்பது பெறப்படும். “உருகெழு சிறப்பின் முருருமனைத்தரீ இக் கடம்பும் களிறும் பாடி” என முருகனையும், அவன் கடம்பையும், களிற்றையும் பாராட்டியிருத்தல் இதை உறுதிசெய்தல் காண்க. இவர் வேடர்வழி வந்தவராவர் என்பது துணியப்படவே, எழுஉப்பன்றி என்ற இச்சிறப்பு, இவர்க்குத் தொழில் பற்றி வந்ததாம் எனக் கோடல் பொருந்தும். இவர் பாடிய பாக்கள் இரண்டு நெடுந்தொகை, மணிமிடைபவளத்தின் கண் இடம் பெற்றுள்ளன.

ஒரு செய்யுளில், பகைவரை அழிக்கவல்ல கடல் போலும் பெரிய படையுடைய பாண்டியனையும், அவனுக் குரிய பொதிய மலையினையும் எடுத்துக்கூறிப் பாராட்டியுள்ளார். “உடலுநர்க் கடந்த கடலக் கானைத், திருந்திலை நெடுவேல் தென்னவன் பொதியில், அருஞ்சினம், இழி தரும் ஆர்த்துவால் அருவி” (அகம் : ௧௩௮)

பரதவர், தாம் கொணர்ந்த பெருமீன் இனங்களைத் தம் மக்கட்கு விளக்கொளியில் காட்டி விளக்குவர் என நெய்தல் நிலத்தார் இயல்பையும் உணர்ந்து கூறியுள்ளார்.

“நளிகடல்
திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கில்
பன்மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய

எந்தையும் செல்லும்.”
(அகம் : ௨௪௦)