பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௪. ஒருசிறைப் பெரியனார்

ஒருசிறைப் பெரியனார் என்ற இப்பெயர் இவர்க்கு இடப்பட்டது ஏன் என்பது புலனாகவில்லை; இப்பெயர், சில ஏடுகளில் ஒருசிறைப் பெயரினார் என்றும், ஒருசிறைப் பெரியனார் என்றும் காணப்படுகிறது; பெரியன் என்ற பெயர், மக்களுக்கு இட்டு வழங்கும் பெயர்களுள் ஒன்றாகப் பழந் தமிழ்க்காலத்தே வழங்கிற்று என்பது, பொறையாற்றுக்கிழான் பெரியன் என அழைக்கப்பெறுதலாலும் விளங்குவது காண்க, இவராற் பாராட்டப்பெற்றோன் நாஞ்சில் வள்ளுவன் ஒருவனே.

நாஞ்சில் வள்ளுவன், தமிழ் நாட்டின் தென்கோடிக் கண்ணதாய நாஞ்சில் நாட்டில், நாகர்கோயிலுக்கும், குமரிமுனைக்கும் இடையில் உள்ள நாஞ்சில் மலையையும், அதைச் சூழஉள்ள நாட்டையும் ஆண்டிருந்த ஒரு குறுநிலத் தலைவன் ; சேரவேந்தர்க்குக் கீழிருந்து வாழும் சிற்றரசன் ; சிறந்த கொடையாளன் ; ஒளவையார், கருவூர்க் கதப்பிள்ளை, மதுரை மருதன் இளநாகனார் முதலாய புலவர்களும் இவனைப் பாராட்டியுள்ளனர்.

இவனைப் பாராட்டிய புலவர் ஒருசிறைப் பெரியனார், புலவரெல்லாம் முன்னிலை நிறுத்திப் பாடவிரும்பும் பேரரசர்களைப் பாடவிரும்பாது, நாஞ்சில் வள்ளுவனையே முதற்கண் பாட விரும்பியுள்ளார் எனின், நாஞ்சில் வள்ளுவனின் பெருமை வெளிப்போந்து நிற்றல் காண்க. பேரரசர்களைப் பாட விரும்பாத புலவர் தாம் ஒருவரே எனக் கூறும் புலவர் கூற்று, அவர் தம் பெருந்தகையினைப் பலப்படுத்தி நிற்றலும் காண்க. நாஞ்சில் வள்ளுவனை வாழ்த்திய பலவர், அவளைப் பெற்று உயர்நிலை உடையவனாக்கிய அவன் பெற்றோரையும் வாழ்த்தியுள்ளமை “மகன் தந்தைக்கு ஆறும் உதவி, இவன் தந்து என்னோற்றான் கொல்எனும் சொல்” பான்ற குறள் நெறிகின்ற நாஞ்சில் வள்ளுவன் பெருமையினை மறைமுகமாகப் பாராட்டியதேயாம்.