பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩எ. ஒரூஉத்தனார்

ஒரூஉத்தனார் வரலாறு குறித்து ஒன்றும் விளங்கிற்றில்லை. இவர் பாடிய எருமை மறம் என்ற துறைதழுவிய பாடல் பெரிதும் பாராட்டற்குரியதாம்.

போர்க்களத்தே பகைவன் அமைத்திருந்த நாற்படை யாலாய பேராணை அழித்து, உட்புகுந்து தான் ஒருவனாகவே அரும்போர் ஆற்றிக்கொண்டிருந்தான் ஒரு வீரன்; அவன் ஒருவனைப் பகைவர் பலர் சூழ்ந்து போருடற்றுவாராயினர் : இந் நிலையினைக் கண்டான் மற்றொரு வீரன் ; அவனுக்குத் துணையாக மற்றொருவர் விரைந்து செல்லாது போயின், அவனுக்குப் பகைவரால் கேடுண்டாதலும் கூடும் என அஞ்சினான் ; உடனே வேலேந்தி விரைந்து அவனை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டான் ; முன்னவன் ஒருவனாலேயே, தம் படை பாழுறுவதைக் கண்ட பகைவர், இவன் ஒருவனும் அவனுக்குத் துணையாய் வந்து சேரின், தம் படை முழுதும் அழிந்துவிடுமே என அஞ்சினர்; உடனே, வருகின்ற அவனை உள்ளே விடாது தடுத்து நிறுத்துங்கள் எனத் தம் படை மறவர்க்கு ஆணையிட்டனர்; அவர்களும் பலர் கூடி அவனத் தடுத்து நிறுத்தப், பெரிதும் முயன்றனர்; ஆயினும் அவன் ஏந்திய வேல் ஒன்றையே துணையாகக் கொண்டு முன்னவனையே நோக்கினவனாய், முன் வைத்த காலைப் பின் வைப்பதோ, பின்னே நோக்குவதோ செல்லாது, எதிர்நின்று தடுத்தார் எவரையும் விடாது அழித்துக்கொண்டே ஆங்குச் சென்று அவனுக்குத் துணையாயினான். அத்தகைய பெருவீரன் ஒருவனின் பேராற்றலைப் புலவர் புகழ்ந்து பாடியுள்ளார்.

வீரன், பின்னோக்காப் பெருமித நடையும், பகைவர் இடைநின்று செய்யும் இடையீடுகளை மதியா மாண்பும் உடையான் என்பதை விளக்க, அவன் கொலையுண்டு விழ்ந்த வீரர்தம் குடர் தன் காலைப் பிணிக்கவும், பின்னோக்காது சேறல், பாகர் பூட்டிய சங்கிலியாகிய தளையினை