பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௧. கடுகு பெருந்தேவனார்

பாரதம் பாடிய பெருந்தேவனாரின் பிரித்து அறிதற்கு இவர் பெயர்க்குமுன் கடுகு என்ற சிறப்பளித்து வழங்கினர் மக்கள். அன்று மக்கள் வழங்கிய அச்சிறப்பிற்கான காரணம் யாது என்பது இப்போது விளங்கவில்லை. பாண்டி நாட்டில், கடுகுசந்தை என்றோர் ஊர் உளது; அவ்வூரோடு கொண்டிருந்த தொடர்பால், அச்சிறப்பு அளிக்கப்பெற்றதோ என ஐயுறுவாரும் உளர்.

“கேள்கே டூன்றவும், கிளைஞர் ஆரவும், கேளல் கேளிர் கெழீ இயினர் ஒழுகவும்” வாழும் வாழ்வே வாழ்வெனப்படும்; அத்தகைய வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாது வேண்டப்படும். அப்பொருள் அரிதின் முயன்று தேடுவார்க்கே உண்டாம்; “திறம்புரி கொள்கையொடு இறந்துசெயி னல்லது அரும்பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்,” “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல்” இந்த உண்மையுணர்ந்த உயர்ந்த காதலர் இருவருள், ஆண் மகன் அப்பொருள்தேடிப் பிரிந்து சென்றிருந்தான். சென்ற தலைவன் தன்மாட்டுப் பேரன்புடையவனாதலின், அவன் பிரிவுத்துயர் பொறுக்கலாற்றாது, பொருள் சேர்த்தற்கு முன்னரே வந்துவிடுவானோ என அஞ்சினாள் அவன் மனைவி. அவள் அச்சத்தை உணர்ந்தாள் அவள் தோழி. அவளுக்கு, அவன் அவ்வாறு வாரான் என உறுதி கூறித் தேற்ற எண்ணினாள். உடனே தலைவிபாற் சென்று, “தோழி! சென்ற நம் தலைவர், தளர்ந்த நம் சுற்றத்தைத் தாங்குதல் தம் கடன்; ‘செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்’ என்ற கொள்கையினை உடையவராவர். இவ்வெண்ணம் நின்பால் கொண்ட அன்பால், ஒரோவழி சிறிது நெகிழின், உடனே அவர் செல்லும் காட்டு வழிக் காட்சிகள், அக்கொள்கையின் உயர்வினை அவர் உள்ளத்தே உறுவிக்கும் இயல்புடையவாம். தாம் சென்ற காட்டுவழியில் யானை ஒன்று, பசியால் வருந்தி,