பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அதியன் விண்ணத்தார்

நடைமெலிந்து தன்னைப் பின்தொடர்ந்துவரும் தன் இனத்து யானைகளின் துயர்நிலைகண்டு பெரிதும் துயருற்று, அக்காட்டிடத்தே வளர்ந்து, நீர் இன்மையால் வாடி உலர்ந்துபோன யாமரத்தைத், தன் கோட்டால் குத்திப் பிளந்து அவற்றிற்கு அளித்து, அவற்றின் பசி போக்கி மகிழ்ந்த அரிய காட்சியொன்றைக் கண்டார் என அவ்வழி வந்தார் கூறக்கேட்டேன்; தன்னைச் சூழ்ந்து வாழும் தன் இனத்தைப் பேணிக் காத்தல் தன் பெருங்கடனாம் என்ற அறிவு, அஃறிணை உயிராகிய யானைபால் இருக்கக்கண்ட நம் தலைவர், தம்முடைய சுற்றத்தாரைக் காக்கத் துணைபுரியும் பொருள் பெறாமல், இடையே மீள்வாரல்லர். ஆகவே, அவர் தம் கடமை தவற வந்துவிடுவரோ என அஞ்சற்க” என ஆறுதல் கூறினாள். தோழியின் இவ்வறிவுரையினை அழகாகப் பாடிக் காட்டியுள்ளார் நம் புலவர்.

ஆறறிவுடைய மக்கட்கு, ஐயறிவுடைய அஃறிணைப் பொருள்கள் அளிக்கும் அறிவும் உண்டு. அவற்றின் செயலால் அறிவுபெறும் மக்களும் உளர் என்ற உண்மையினை உணர்த்தாது உணர்த்தியுள்ளமை யுணர்க.

“பொத்தில் காழ அத்த யா அத்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி, உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப்பு யானை கண்டனர் ; தோழி!
தங்கடன் இறீ இயர் எண்ணி, இடந்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற ஆறே.” (குறுந் : ௨௫௫)