பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௨. கடுந்தொடைக் காவினார்

கடுந்தொடைக் காவினார் எனும் இப்பெயர், புலவர்க்கு யாதோ ஒரு காரணம்பற்றி இடப்பெற்ற பெயரேயன்றி, இயற்பெயரன்று என்பது உறுதி. அவர்க்கு இப்பெயர் இடற்காம் காரணம் இஃது என இப்போது துணிந்து கூறுதற்கியலவில்லை.

காய்தல் உவத்தல் அகற்றி ஆயும் அறிவுடையராய புலவர்கள், எதையும் உள்ளதை உள்ளவாறே உணர்த்தும் உரனுடையராவர். ஆவின் கன்றை அழித்தவன் தன் மகன் என்றும் பாராமல், அவனைத் தன் தேர்க்கீழிட்டு முறை செய்த முடிமன்னன்போலும் நல்லரசர்களைப் பெற்றிருந்த தமிழகம், அறனறியா ஆணவ அரசர் சிலரையும் கொண்டிருந்தது. உலகெலாம் அறிவொளி வீசும் காலம் இது எனப் போற்றப்பெறும் இக்காலத்தும், பொல்லா அரசர் பலர் வாழ்கின்றனர். எனின், அத்தகையார் சிலர், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்திருந்ததில் வியப்பொன்றும் இல்லை. நல்லரசர்களை நாவார வாழ்த்திய புலவர்கள், அப்பொல்லா அரசர்களைப் பழித்துரைக்கவும் அஞ்சினரல்லர். புலவர் கடுந்தொடைக் காவினார், அத்தகைய அரசன் ஒருவனின் அடாச்செயலே எடுத்துக் காட்டிப் பழித்துள்ள பாட்டொன்று அகநானூற்றின் கண் இடம்பெற்றுளது.

பொருள் கொண்டு போவார்தம் கைப்பொருளைக் கவர்ந்துகொண்டு, அவர் உயிரைப் போக்கும் ஆறலை கள்வர் வாழும் கொடுமை நிறைந்தது பாலைநிலம். அவ் வாறலை கள்வர்தம் அரசன், அறமறியா மறம் நிறைந்த மனத்தினனாவன். அவன், தன்கீழ் ஏவல்புரியும் ஆறலை கள்வர், தாம் இருக்கும் இடத்தருகே வந்த வழிப்போவார்பால், தாம் கவர்ந்துகொள்ளலாம் பொருள் ஏதும் இல்லை என்பதறிந்து அவரைப் போகவிட்டனர்; இதை அறிந்தான் அவர்கள் அரசன். அவர்பால் பொருள் இல்லையாயினும்,