பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௩. கடுந்தோட்கர வீரன்

தஞ்சைமாவட்டம் திருவாரூருக்கு அருகே கரவீரம் என்ற பெயருடையதோரூர் உளது; ஆண்டுப் பிறந்து' வாழ்ந்தமையால் இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்று என்பர் சிலர் ; காவீரம் என்பது அலரிமலரைக் குறிக்க வழங்கும் ஒரு பெயராம் ; ஆகவே, யாதோ ஒருகாரணம் பற்றி அலரிமாலை அணிந்திருந்தமையால் இப்பெயர் உண்டாயிற்று என்பர் மற்றும் சிலர். இவர் பெயர்க்கு முன் வரும் கடுந்தோள் என்ற சிறப்பு, புலவர்தம் பெருந்தோட். பெருமையால் வந்ததுபோலும். கடுந்தோள்கரவீரன் என்ற இப்பெயர், ஆற்றல்மிக்க தோளும், கசமும் துணைசெய்யப் பெரும்போர் புரியவல்ல வீரம் உடைமையால், வந்த காரணப் பெயராம் என்பதை உணர்த்தி நிற்றல் அறிக.

ஒரு தலைவன், தான் காதலித்த ஒரு தலைவிபால் கொண்ட பேரன்பால், கடத்தற்கரிய காட்டுவழியினப் பேயும் உறங்கும் நள்ளிரவில் கடந்துவரலாயினன்; ஆனால் அத்தலைவியோ, அவன் அவ்வாறு வருதலை வெறுத்தாள். ஆண்டு அவனுக்கு ஏதம் உண்டாயின், தன் உயிர் நிற்றலும் அரிதாம் என அஞ்சினாள்; ஆகவே, ஒருநாள், வந்த அவன்பால் ‘’ஐய! நீவிர் வரும் வழி ஏதம்பல நிறைந்தது: அவ்வழிவரும் உமக்கு ஏதம் உண்டாதலும் கூடும்; அவ்வாறு உண்டாயின், யான் உயிர்வாழ்தல் ஒண்ணாது: கணவர் இறந்தபின்னர்க் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழும் வாழ்க்கையினை விரும்புபவளல்லள் யான் நீவிர் இறப்பின், யானும் உயிர் விடுவல்; ஆகவே, அன்ப! அவ் வழி வருதலை அஞ்சுகின்றேன்,‘ ’என்று கூறினாள்.

ஒருபெண், தன் அன்பால் அவன் இறத்தலும் உண்டு’ அவன் இறந்தால் தான் உயிர்வாழ்தல் இல்லை என்பன போன்ற சொற்களைக் கூறல் மங்கலமன்று; மரபுமன்று : ஆகவே, அதை அவள் விளங்க உரைத்தாள் எனக் கூறலும் புலமைக்கு இழுக்காம். அதனால் அதை அவ்வாறு கூறினாள் எனப் பாடாது, அப்பொருள் அவன் உள்ளத்தே