பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அதியன் விண்ணத்தனார்


தோன்றுமாறு, வேறு ஒருபொருள்மேல் ஏற்றிக் கூறிப் .பாடியுள்ளார் புலவர்.

தலைவி, நாடனைக்கூறுங்கால் 'ஐய! நின் நாடு, தன் பால் அன்புடைய கணவனாகிய ஆண்குரங்கு இறந்துவிட்ட தாக, அதன்பால் பேரன்புகொண்ட பெண்குரங்கு, அது இறந்தபிறகு, இருந்து உயிர்வாழவிரும்பாது, மரமேறுதல், வரைபாய்தல்போலும் தம் இனத்தொழிலையும் பயின்றறியாப் பருவமுடைய தன் இளைய குட்டியைத் தன்னைச் சுற்றி வாழும் ஏனைக் குரங்குகளிடத்தே ஒப்படைத்து விட்டு, உயர்ந்த மலையுச்சியினின்றும் உருண்டு வீழ்ந்து உயிர்விடும் சிறப்புடையது' என்று கூறிப் பாராட்டுவாள்போல் கூறி, நின்நாட்டு விலங்கினிடத்தே காணப்பெறும் இவ் விழுமிய பண்பு, எம்போலும் பெண்டிர்பாலும் உண்டாம் என்பதை உணர்வாயாக! என உணர்த்தினாள்.

உயர்திணையாய மக்களிடத்தேயல்லாமல், அஃறிணையாய மாக்களிடத்தும் காணப்பெறும் மாண்பினை மங்கல முறையால் எடுத்துக்காட்டிய மாட்சி அம்மம்ம! அரிது அரிது!. -

"கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்
சாரல் நாட! நடுநாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே.”
(குறுங் : சுசு)