பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௪. கடுவன் இளவெயினனார்

எயினன், என்ற பெயருடைமையால், இவர் வேடர் குலத்தவர் என்பதும், இளமை எனும் சிறப்புடைமையால், சீரிளமைக்காலத்திலேயே, பேரறிவு பெற்ற பெரியாராவர் என்பதும் புலனாம். இவர் பெயர்க்கு முன்வந்துள கடுவன் என்ற சிறப்பு, ஆண்குரங்கு எனும் பொருளில் வழங்கி வருவதொரு பெயர்ச்சொல். அது, இவர் பெயர்க்குச் சிறப்பளிக்க வந்தவாறு யாதோ விளங்கவில்லை, கடுவன் இளவெயினனார் பாடிய பாக்கள் மூன்று பரிபாடற்கண் இடம்பெற்றுள்ளன. பரிபாடற் செய்யுட்கள், திருமால், செவ்வேள், வையை இவற்றைச் சிறப்பிக்கவந்த பாடல்களாம். இவர் பாக்கள் மூன்றனுள் இரண்டு திருமாலையும், ஒன்று செவ்வேளையும் பாடிப் பரவுகின்றன.

கடுவன் இளவெயினனார் பாக்கள், சங்ககாலத் தமிழகத்து மக்களிடையே நிலவிய சமயங்களின் நிலை இது எனத் தெளிய உணரத் துணைபுரிகின்றன. திருமால், நீலமணி, அலை ஓய்ந்தகடல், நீருண்ட மேகம் இவற்றின் நிறம் உடையவன்; அவனுக்குக் கருடன், பனை, காஞ்சில், யானை இவை கொடிகளாகும்; ஆல், கடம்பு, ஆற்றிடைக் குறை, குன்று இவை அவன் உறையும் இடம் என்று கூறியுள்ளார். திருமால், கனலி, கூற்றம், ஞமன், ஞாயிறு இவை ஒன்றுகூடும் ஊழிக்காலத்தே அழியும் உலகினைக் காக்க வராக உருவம் கொண்டான்; இரணியன் உயிரைப் போக்க நரசிங்க அவதாரம் கொண்டான்; உலகை அளந்து காட்ட வாமனாவதாரம் கொண்டான் என்றும் கூறியுள்ளார்.

பெண் குதிரை உருவங்கொண்ட உருப்பசியைக் கண்டு காதல்கொண்ட ஆதித்தன், தானும் குதிரை வடிவினனாய் அவள்பாற்செல்ல, அப்போது, அவனுடைய நாசிகைத்துளை வழியே வீழ்ந்த இரண்டு விரிய விந்துக்களினின்றும் இரட்டையராகப் பிறந்தவர் அசுவினித்தேவர்.