பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

அதியன் விண்ணத்தனார்


இந்திரன் குதிரைவால் வெண்ணிறம்; அன்றாயின் நினக்கு அடிமையாவேன், எனக் கருடன் தாய், கத்துரு என்பாளோடு உறுதிகூறினாள்; அக்கத்துரு, தன் வஞ்சனையால், அவ்வாலைக் கரிதாக்கினாளாக, அஃதறியாது அவட்கு அடிமையாகி வருந்தும் தன் தாயை, அக் கத்துருவின் விருப்பப்படி, அமராபதிக்கண் இருந்த அமிர்தத்தை அவட்குக் கொடுத்து மீட்டான் கருடன்.

திருமால், அசுரரை எல்லாம் வெற்றிபெற்று நின்றக் கால், ‘’இவ்வெற்றியெல்லாம் இவனால் உற்றவல்ல; இவனைத் தாங்கித்திரியும் என்னால் ஆய” என்று கருடன் கூறிப் பெருமைகொள்ள, திருமால், ‘’நீ என் முழு உடலையும் தாங்கல்வேண்டா என் சிறுவிரல் ஒன்றைத் தாங்கிவிடுவையாயின், நின் கூற்று உண்மையாகும்" என்று கூறி, அவ் விரலை அவன்மேல் வைக்க, அது ஒன்றைத் தாங்க மாட்டாதே, கருடன் பாதளத்து வீழ்ந்து நெடுங்காலம் கிடந்து வருந்தித் துதித்து வீடுபெற்றான்.

திருமால் மோகினி உருவங்கொண்டுவந்து, அமிர்தம் கடைந்த, அசுரர் அமரர் ஆய இருவருள், அசுரரை வஞ்சித்து, அமரர்க்கே வழங்கினான்.

உலகம் அழிக்கும் பெருமழை உற்றக்கால், திருமால் அன்னப்புள் உருவங்கொண்டு உயரப் பறந்துசென்று, தன் இறகால் பெய்த பெருமழை நீரை எல்லாம் உலர்த்தி உலகைக் காத்தான். திருமாலைக்குறித்து வழங்கப்பெறும் இவைபோலும் கதைகளையெல்லாம் கூறியுள்ளார். -

நான்முகனாகிய பாகன் செலுத்த வேதக்குதிரைகளைப் பூட்டிய பூமியாகிய தேரை ஊர்ந்துசென்று, நாகம் நாணாகவும், மலை வில்லாகவும் கொண்டு, திரிபுரங்களும், ஒருங்கே முழுதும் அழியுமாறு ஒர் அழலம்பு எய்தான் சிவன் என்றும், சிவன் உமையோடின்புற்றிருக்கையில் உண்டான கருவை, இந்திரன் வேண்டுகோட்கு இணங்கிப் பலவாகச் சேதித்தான்; அக்கருவை முனிவர்கள் எழுவரும் , பெற்றுத் தீயைமூட்டி, அதன்கண் அவியோடு பெய்தனர்: