பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௯. கண்ணங்கொற்றனார்

கொற்றனார் எனும் இயற்பெயருடைய இப்புலவர், கண்ணன் என்பாரின் மகனாராவர்; நற்றிணை நானூற்றில், இவர் இயற்றிய பாட்டொன்றும் இடம் பெற்றுளது.

தலைவன், தான் காதலித்த பெண்ணின்பால் பேரன்புடையவன்; அவள்பால் அவன் கொண்ட பேரன்பு, அவள் உறையும் ஊர், கடத்தற்கரிய காவலையுடையது என்பதையும் கருதாது, நடந்துவரும் வழி தவறின், தவறிய நெறியினைக் காலால் தடவி அறிதற்கும் இயலா ஆரிருட்காலத்தே, அவளைக் காண அவனைத் துரத்தும் அத்துணை வலியுடைத்து, தலைவன் பேரன்பினைத் தாம் அறிந்தது மட்டுமன்று; அதை, அவன் காதலிக்கும் அப்பெண்ணும் அறிவாள் என்று கூறியுள்ளார் புலவர். தலைவன் மட்டும் அத்துணை அன்புடையனாக, அவ்வன்பு அவன் காதலிக்கும் அவள்பால் இன்றாயின், ஒருதலைக் காமமாம்; அவ்வன்பாற் பயன் இன்றாம்; ஆனால், அவனைப் போன்றே அவளும் அவன்பால் பேரன்புடையள் என்பதையும் அறிவித்துள்ளார் புலவர். அவன், தன்னைக்காண இடர்ப்பாடு பலவற்றையும் எண்ணாது வருதலைக்காண வருந்திற்று அவள் உள்ளம்; அவ்வாறு வருவதால் அவனுக்கு யாதேனும் இடையூறு உண்டாயின் என்னாம் என அஞ்சினாள்; மேலும், தன் தந்தையும், தன்னையரும், மதுவுண்டு மயங்குவாராயினும், வெகுளியிற் சிறந்தார்; அவரால் அவனுக்கு இடையூறு உண்டாதலும் உண்டாம்; மேலும், ஊரில் மழை மிகப் பெய்தமையால், அவன் வரும் வழியில் ஏதம் பல நிகழினும் நிகழும். ஆகவே, அவன் இரவில் தன்னூர் வருதல் தகுதியுடையதன்று எனத் துணிந்தாள்; ஆயினும், அவனோ அவளைக் காணாது ஒருநாளும் இரான் என்பதையும் உணர்ந்தாள்; இதற்கு என்செய்வது என ஏங்கிநின்றகாலை தினைப்புனத்தைக் காக்கவேண்டிய கடமையினை, அவள் பெற்றோர் அவள்மாட்டு மீட்டும் அளித்தனர்: அகமகிழ்ந்தாள். அவனையும் அவன் மலையையும் மன-