பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௬. கரும்பிள்ளைப்பூதனார்

கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்கள் அருளிச்செய்த எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாக விளங்குவது, உயர்ந்தோரால், “ஓங்கு பரிபாடல்” எனப் போற்றப்பெறும் பரிபாடலாம்; பரிபாடல் எனப்படும் இசைப்பாவான் இயன்ற எழுபது பாடல்களைக் கொண்டதொரு சிறு நூல் பரிபாடல்; மதுரை, வையை, திருமருதமுன்றுறை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை போன்ற இடங்களின் பண்டைக்காலப் பெருமைகளையும், அக்காலத்துத் தமிழகத்தின் நாகரிக நன்மைகளையும், தெளிய உணரத் துணைபுரியும் பெருநூல் பரிபாடல்; பரிபாடற் செய்யுட்கள் எழுபதனுள், காலவெள்ளத்தால் காணாதுபோயின கழிய, இப்போது கிடைத்திருப்பன இருபத்து நான்கு; இவற்றைப் பாடிய புலவர்கள் பதின்மூவர்; அவருள் கரும்பிள்ளைப்பூதனாரும் ஒருவர்; வையையாற்று வெள்ளப்பெருக்கினை விரித்துரைக்கும் இவர் பாட்டு, பத்தாவது பாடலாக வரிசை செய்யப்பெற்றுளது; வையை, வயல்தொறும் பொன் கொழித்துப் புரண்டோடும் செயல், வறுமையால் வாடி வாயில் வந்து ஏற்பார் தம் கைந் நிறையப் பொன்சொரியும் பாண்டியன் செயல்போலும் எனக் கூறிய உவமையால், புலவர் பாண்டியன்பால் பேரன்பு கொண்டவர்; அவனால் அன்பு செயப்பெற்றவர் என்பன புலனாம்.

“இலம்படு புலவர் ஏற்றகை ஞெமரப்
பொலஞ்சொரி வழுதியிற் புனலிறை பரப்பிச்

செய்யிற் பொலம்பரப்பும் செய்வினை.” (க௦: க௨௬ - ௮ )

தலைவன், தான்வரும் பருவம். இது எனக் குறித்துச் சென்ற பருவம் வரவும், அவன் வாராமை கண்டு வருந்திய தலைமகளது ஆற்றாமை கண்ட தோழி, தலைமகன்பால் பாணனைத் தூதுவிட, சென்ற பாணன், பாசறைக்கண் படையொடு வதியும் தலைமகன்பால், பருவவரவும், வையை நீர் விழவணியின் வனப்பும் கூறிய துறையமையப் பாடிய