பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

அதியன் விண்ணத்தனார்


வருந்தினாள் தோழி: வருந்தும் அத்தோழிபால், 'தோழி!” என் துயரினைத் தாங்கித் துணைபுரியவேண்டிய நம் தலைவர், பிரிந்துவிட்டமையான், என் உள்ளம் உறுதுயர் கொள்கிறது; அதற்கு யான் என்செய்வேன்?' எனக் கூறி. வருந்தினாள் என்ற கருத்து அடங்கிய செய்யுட்கண், தலைவன் தலைவியர்க்கிடையே உண்டாம் அன்புத்தளையின் ஆற்றலை அறியச் செய்தமையோடு உடற்கும், உள்ளத்திற்கும் இடையே உண்டாம் உறவினையும் புலப்படுத்தியுள்ளார் புலவர்.

"நோம்என் நெஞ்சே, நோம்என் நெஞ்சே;
இமைதிய்ப் பன்ன கண்ணிர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவில ராகுதல் கோம்என் நெஞ்சே."

நான்காம் வேற்றுமை உருபு உணர்த்தும் பொருள்களுள் அதற்கு வினையுடைமை என்பதும் ஒன்று; அது, கரும்பிற்கு வேலி என்றாற்போல், ஒன்றிற்குப் பயன்பட வருதல் என்ற பொருள் உடையதாம்; ஈண்டு 'அமைதற்கு அமைந்த நம் காதலர்" என்பதில் அமைதற்கு என்பதன்கண் வரும் அவ்வுருபும் அப்பொருட்டாம்; ஆகவே வேலியே பயிரை மேய்ந்தால் என்பதற் கிணங்க, கரும்பிற்கு வேலியாய்ப் பயன்படவேண்டிய கரும்பு, அக் கரும்பையே அழிக்க முனையின், அக் கரும்பு அறவே அழிதல் திண்ண மாம், அதைப்போன்றே, தலைவியைக் காக்க வேண்டிய தலைவனை, அவளை அழிக்க முனைவயிைன், அவள் அழிதல் உறுதியாம் எனப் பொருள் படும்; இவ்வாறு நுணுகிப் பொருள்படுமாறு பாடவல்ல அவர் பெரும் புலமையினைப் பாராட்டுவோமாக.