பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவட்டனார்

183


போம் எனினும், அஃது அழிந்த பின்னரும், அழியாது நிற்பனவும் சில உள. ஆகவே, உடல் அழிவு கண்டு அஞ்சற்க! அழியாது நிற்பனவற்றுள், நல்லனபால் நாட்டம் கொள்க ! அவ்வாறு அழியாது நிற்பன பழியும் புகழுமாம். பழி, புகழ் இரண்டனுள் ஒன்றே நிற்கும்: ஒரே இடத்து இரண்டும் நிற்றல் இல்லை; 'வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய, வாழ்வாரே வாழாதவர்" என்ப; இனிய புகழை விடுத்து, இன்னத பழிவிரும்புவார் அறிவுடையராகார்; கனியிருப்பக் காய்கவரும் கருத்திலான் அல்லன்; நீ ஆகவே, வசை ஒழித்து இசை வேண்டுக அது வேண்டுவையாயின், முதற்கண், நின்பால் ஆசை அறுதல் வேண்டும்; 'அற்றது பற்று எனின் உற்றது வீடு' என்ப. பற்றற்ற நிலையோடு அமைதியுருது அறவழி நிற்றலும் வேண்டும்; அறவழி நிற்றலோடு, நின்பால் உள்ளனவாய நிலைபேறில்லாச் செல்வத்தால், நிலைபேறுடையன ஆக்கிக் கோடலும் வேண்டும். "அற்கா இயல்பிற்றுச் செல்வம்: அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்'. அதுவே, அறிவுடைமையும் ஆகும்; நின்பாற் கிடந்தும், நினக்குப் பயன் தாரா அப்பெரும் பொருளையெல்லாம் நின்பால் வந்து வறுமைகூறி இரப்பார்க்கே வழங்கிவிடுவையாயின், புகழ் நின்பால் நீங்காது நின்றுவிடும்; நின்உடல் அழிந்து ஆண்டு பல கழிந்த பின்னரும் நின்புகழ் நின்று, நின்பெயர் உலகுள்ளளவும் ந்லைபெறச் செய்யும். ஆகவே, அருளறம் மேற்கோடலை அறிவுடைமையாக் கொள்க" என்று கூறினார். இவ்வாறு நிலையாமை அறிவுறுத்தி, அறமுரைக்கும். பெருங்காஞ்சித்துறை தழுவப் புலவர் பாடிய பாட்டு, புற நானுற்றின்கண் இடம் பெற்றுளது.

"பாறுபடப் பறைந்த பல்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு
பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணம்தழுஉப் பற்றி
விளரூன் தின்ற வெம்புலால் மெய்யர்

களரி மருங்கிற் கால்பெயர்த்து ஆடி,