பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

அதியன் விண்ணத்தனார்


ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடு முன்னினரே, நாடுகொண் டோரும்!
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்;
அதனால், வசைநீக்கி இசை வேண்டியும்,
நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
நிலவுக் கோட்டுப் பலகளிற் றொடு
பொலம்படைய மாமயங்கிட
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
கொள்என விடுவை யாயின், வெள்ளென.
ஆண்டு பெயர்ந்த பின்னும்
ஈண்டுநீடு விளங்கும் நீஎய்திய புகழே.’' (புறம் : ௩௫௬)

விரைந்து வந்து வரைந்து கொள்வேன் எனக் கூறிப் பிரிந்து சென்றுளான் தலைவன்; பிரிந்தறியா அவனைப் பிரிந்ததனாலாய துயர் ஒருபால் வாட்டவும், தன் களவொழுக்கத்தினை அறிந்துகொண்ட தாய் கூறும் சுடு சொற்கள் ஒருபால் வருத்தவும், வாடையும், பிரிந்தார்க்குப் பெருந்துயர் தரும் மாலையும் ஒருபால் நின்று மருட்டவும், தலைவி வருந்தாது நிற்பதைக் கண்டு வியந்தாள் தோழி; உடனே அவள், தலைவிபாற் சென்று "அன்புடையாய், நின்னைச் சூழ்ந்து நின்று இத்தனையும் வாட்டவும், வருந்தாது நிற்கும் இவ்வாற்றல், நினக்கு எற்றால் ஆவது? என வினவினாள். அதற்கு அவள் "தோழி! சென்ற நம் தலைவர், விரைந்து வந்து வரைந்து கொள்வேன் என வஞ்சினம் கூறிச் சென்றுளார்; அவர் கூறிய உரை பிறழாக் குணமுடையர் என்பதை அறிவேன் ஆதலாலும், நான் ஈண்டுளேன் ஆயினும், ஈங்கிருந்தே அவர் காட்டு மலையினைக் காணுகின்றேன்; அவர் நாட்டு மலையினைக் காணல், அவரைக் காணலேபோலும் மகிழ்ச்சியினை அளிக்கிறது ஆதலாலும், பலாவின் கனிபெற்ற மந்தி, தன் கடுவனோடு களித்து வாழும் அவர் நாட்டு மலைவாழ்க்கை, மனைவியோடு கூடிவாழும் வாழ்க்கையின் மாண்பினை அவர் மனங்கொளச் செய்து, மணத்திற்கு விரையச்செய்யும் என்ற உறுதி