பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௪. காவல்முல்லைப் பூதனார்

பூதனார் எனும் இயற்பெயருடைய இவர், காவல் முல்லை என்ற புறத்திணைத்துறை தழுவிய பாடல்களைத் திறம்படப் பாடும் வல்லமையால், காவல்முல்லைப் பூதனார் என அழைக்கப்பெற்றுளார். ஆனால், இவர் பாடிய அத்துறைப் பாடல்கள் இப்போது கிடைத்தில. இனி, அள்ளூர் நன்முல்லையார் என்ற பெயரை நோக்குவார்க்கு முல்லை என்பது, அக்கால மக்கள் மேற்கொண்ட பெயர்களுள் ஒன்று என்பது புலனாம்; அம்முல்லை என்ற பெயர் பூண்டார் ஒருவர் இருந்தார்; அவர்க்குக் காவல் என்ற சிறப்பு, எக்காரணத்தாலோ அளிக்கப்பட்டிருந்தது; அன்னார்க்கு மகனாய்ப் பிறந்தமையால், பூதனார் காவல் முல்லைப் பூதனார் என அழைக்கப்பெற்றார் எனக் கூறுவாரும் உளர். இவர் பாடிய பாக்கள் எட்டு; நற்றிணைக்கண் ஒன்று; குறுந்தொகை, நெடுந்தொகைகளில் முறையே இரண்டும், ஐந்தும் உள்ளன. இவர் வரலாறாக அறியத் தக்கன இத்துணையவே.

“செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்” என்ப தம்மை எதிர்நோக்கி வாழும் பெரிய சுற்றம் வறுமை நீங்கி வாழத் துணைபுரிவதும், மனைவியும், மக்களும் சூழ வாழும் தம் வாழ்வு, இடையறாப் பேரின்பம் உடைய தாக்கலும், நற்குடிப் பிறந்தார்க்குப் பெருங்கடனாகும்; அவர், அக்கடமையிற் றவறாமை வேண்டின், அவர் பெரும் பொருள் உடையராதல் வேண்டும், பொருள் பெறா வறியர் அத்தகு வாழ்வினராதல் இயலாது; ஆகவே, உயர்குடிப் பிறந்தார் ஒவ்வொருவரும், அப்பெரு வாழ்வு வாழ்வான் வேண்டி, பொருள் தேடிச்செல்லும் பெருமுயற்சியினைப் பேணிக்கொளல் வேண்டும்; பொருள் சேர்க்கும் கடமையுணர்ச்சியுற்றக்கால், காதல் - உணர்ச்சிகொள்ளாராதல் வேண்டும்; காதலினும், கடமையே பெரிது எனும் கருத்து, அவர் உளத்தே ஆழப் பதிதல் வேண்டும்; அவ்வாறின்றிக் காதலே பெரிது எனப் பேணுவாராயின், அவரால் சுடமையிற் பிறழாது நிற்றல் இயலாது; கடமையில் கருத்திலார்க்கு