பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

அதியன் விண்ணத்தனார்


அவைகள் மகிழ்ந்து வாழ்தற்காம் உணவினை அளிக்கவல்ல தன்று; மழை இன்மையால் வறண்டுள அக்காட்டு மலர்களில், தேனின்மையால் தேம்பித் திரியும் அவற்றைக் காணும் அவர் உளத்தே, கருத்தொருமித்த காதலியொடு வாழ்தற்கும் கைந்நிறையப் பொருள் வேண்டும் என்ற எண்ணமே முன்னிற்கும். ஆகவே, அவற்றைக் கண்டு, நின்னை நினைந்து மீண்டுவிடார்; முன்னோக்கிச் சென்று முன்னியது முடித்தே மீள்வர். ஆகவே, மீண்டு, அறனல்லன ஆக்கிவிடுவரோ என அஞ்சற்க' என்றெல்லாம் கூறினாள் எனப் பாடிய பாட்டில், அக்கால ஆண் பெண் உளங்களின் அறிவறிந்த அழகினைப் புலப்படுத்தியுள்ளார் புலவர் :

'அஞ்சில் ஓதி! ஆய்வளை நெகிழ,
நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம்; வாழி தோழி! எஞ்சாத்
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை
வேனில் ஒரிணர் தேனோடு ஊதி
ஆராது பெயரும் தும்பி
நீரில் வைப்பின் சுரன் இறங் தோரே...' (குறுங் : உகக)

'என் நிலைகண்டு வெறுக்காது, அருள்காட்டும் அன்புடையார் பலரும், 'அம்ம! நின் கணவன், நின்பால் வெறுப்பற்றவன்; உளம் ஒன்றிய அன்புடையவன், பிரிந்து வாழாப் பெருநட்புடையவன், பழகற்கினிய பண்புடையவன்' என்றெல்லாம் கூறிப்பாராட்டுகின்றனர்; ஆயினும், பிரியாப் பெருங்காதல் கட்டுண்டு, என்றும் என்னேப் பிரிதலின்றி என் அருகிலேயே வாழ்ந்த அவர், இன்று பிரிந்து மலையிடை வழிகளைக் கடந்து சென்று விட்டனரே என்செய்வேன்' எனக் கூறி வருந்தினாள் ஒரு பெண் எனப் பாடிய பாட்டில், காதலன், காதலியர்க்கிடையே உண்டாம் அன்பு வாழ்க்கையின் இயல்பினையும், பிரியாப் பெருங்காதல் கொண்டாரும், பொருள் ஈட்டல் முதலாம் கடமை நேர்ந்தக்கால், காதலை ஒருவாறு மறந்து கடமை மேற்கொள்ளவே எண்ணுவர் என அக்கால மக்களின்