பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 வள்ளல்கள்

கள் இல்லாமையால், மேய்ந்து மாலை வந்ததும், வீடுநோக்கி வருவதொழிந்து தம் கன்றுகளோடு அக் காட்டிலேயே தங்கும்; கடத்து கடத்து, வெந்த காலுடைய வழிப் போவார், வழி, ஆறலை கள்வர் அற்றது ஆதலின், அவர் அலைப்பரே என அஞ்சி அரண் அமைந்த இடம் தேடி ஓடி ஒளியாமல், தாம் விரும்பும் இடங்களிலே இருந்து இளைப்பாறுவர் ; நாடு கள்வர் அற்றது ஆதலின் நெல் முதலாம் பொருட் குவியல்கள், காப்பார் எவரையும் பெறாமல், களங்களில் தனித்தே கிடக்கும்; அத்துணைக் காவல்நலம் சிறந்தது அந்நாடு.

"பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின்

வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடூர்."            (பதிற்று : எஅ)

"ஆர்வலர் குறுகி னல்லது காவலர்

கனவினும் குறுகாக் கடியுடை வியனகர்.”
                                              (புறம் : கூ.க)

"கன்றமர் ஆயம் கானத்து அல்கவும்

வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும், 
களமலி குப்பை காப்பில வைகவும் 
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்.”
                                              (புறம் : உங) 

இத்துணை வாழ்வும், வனப்பும் மிக்க நாட்டிலே, அத் துணைப் பீடும் பெருமையும் மிக்க மரபிலே, அஞ்சி என்பானொருவன் இருந்தான்; அவன், அதியர் மரபிலே வந்த பல்லோருள்ளும் சிறந்தோனாதலின், கிழார் என்ற வேளாளர் குடியிலே பிறந்து சிறந்தமையால், பெரிய புராண ஆசிரியர், இயற்பெயரான் அன்றி, சேக்கிழார் எனக் குலப்பெயரான் அழைக்கப்படுதலேபோல், இவனும் இயற்பெயரான் அன்றிக் குலப்பெயரால் அதியமான் எனவும், அதியர் மரபிலே வந்த அரசருள் சிறந்தோன் என்ற பொருளில் அதியமான் நெடுமான் எனவும், அச் சிறப்புப் பெயர்களோடு இயற்பெயர் இணைய அதியமான்