பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொற்பிரிப்பு நெறி

இந்தச் சொல்லடைவு அகராதி உருவாக்கத்திற்கான அடிப்படைத் தரவாய் உருவாக்கப்பட்ட காரணத்தால் சங்க இலக்கியச் சொற்பிரிப்பில் தனிக்கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சங்கஇலக்கிய உரைகள் சென்னைப் பல்கலைக்கழக அகராதி ஆகிய இரண்டின் அடிப்படையில் பல்வேறு கூட்டுச்சொற்கள் இனங்காணப்பட்டு 1987-ஆம் ஆண்டுச் சொல்லடைவில் தனிச்சொற்களாய்த் தரப்பெற்றிருந்த சொற்கள் இந்தச் சொல்லடைவில் கூட்டுச்சொற்களாய்த் தரப்பட்டுள்ளன. இந்தவகையில் அகராதிச் சொற்பொருண்மை நோக்கில் உருவான; சொற்பொருள் எனும் இலக்கை முதன்மை நோக்கமாய்க் கொண்ட, தனித்தன்மை வாய்ந்த சொல்லடைவாய் இந்தச் சொல்லடைவு உள்ளது.

இந்தச் சொல்லடைவில் மேற்கொள்ளப்பட்ட சொற்பிரிப்பு நெறிகள் பின்வருமாறு.

கட்டிலா வடிவங்களான வேற்றுமை உருபுகள் தனியே பிரித்துத் தரப்பெற்றுள்ளன. நான்காம் வேற்றுமை உருபைப் பொறுத்தமட்டில் நமக்கு, அவனுக்கு என்றாற் போன்ற சொற்களில்வரும் அக்கு, உக்கு என்பன தனியே பிரித்துத் தரப்பெறவில்லை.

அத்துச் சாரியை பெற்ற அகலத்து என்பன போன்ற சொற்கள் அகலம் அத்து எனப் பிரித்துத் தரப்பெற்றுள்ளன. வானத்து, குன்றத்து என வரும் சொற்களில் நிலைமொழிகள் வான், குன்று எனவே பிரித்துத் தரப்பெற்றுள்ளன.

துணர்ந்தன்ன, துணிந்தன்ன என்பன போன்ற சொற்கள் துணர்ந்து, அன்ன; துணிந்து, அன்ன எனவும் நேர்ந்தாங்கு, பாரித்தாங்கு என்பன நேர்ந்து, ஆங்கு; பாரித்து, ஆங்கு எனவும் பிரித்துத் தரப்பெற்றுள்ளன. இது மொழியியலாளர் உருவாக்கிய சொல்லடைவுகளின் சொற்பிரிப்பு நெறியாக உள்ளதால் இதுவே இந்தச் சொல்லடைவிலும் பின்பற்றப் பட்டுள்ளது.

களிற்றின், யாற்றின் என்பன போன்ற சொற்கள் களிற்று, இன்; யாற்று, இன் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. புனிற்று, சேற்று, சோற்று, ஞாயிற்று என்பன போன்ற சொற்களும் அப்படியே தரப்பட்டுள்ளன.

சுட்டெழுத்துகளும் வினா எழுத்துகளும் அ, இ, உ., எ எனவே தரப்பட்டுள்ளன. அவை, இவை எனும் பொருளில் சுட்டுப்பெயர்களாய் வருகையில் அவ், இவ் எனத் தரப்பெற்றுள்ளன.

ix