பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

சண்பகம்
மைக்கீலியா சம்பகா
(Michelia champaca, Linn.)

சண்பகத்தைக் கபிலர் ‘பெருந்தண் சண்பகம்’ (குறிஞ். 75) எனக் குறிப்பிடுவர். இங்ஙனமே நக்கீரரும் (திருமு. 26-27) நல்லந்துவனாரும் (கலி. 150:20-21) இதனைப் ‘பெருந்தண் சண்பகம்’ என்றே கூறுகின்றனர். சண்பக மலர் மஞ்சள் நிறமான நறுமணம் உள்ளது. பெரிய மரத்தில் பூப்பது. சண்பக மரம் இந்நாளில் திருக்குற்றாலத்தில் நன்கு வளர்கிறது. இதனைச் சண்பகம் என்றுதான் அழைக்கின்றனர். சங்கப் பாடல்களில் ‘சண்பகம்’ என்ற தனிப்பெயர் காணப்படவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : பெருந்தண்சண்பகம்
உலக வழக்குப் பெயர் : சண்பகம், செண்பகம், செம்பகம்
தாவரப் பெயர் : மைக்கீலியா சம்பகா
(Michelia champaca, Linn.)

சண்பகம் இலக்கியம்

பத்துப் பாட்டில் நக்கீரரும், கபிலரும், பரிபாடலில் நல்லந்துவனாரும். ‘பெருந்தண்சண்பகம்’ என்று கூறுவது, ‘சண்பகப்பூ’வைக் குறிக்கும்.

“துவர முடித்த துகள் அரும்முச்சி
 பெருந்தண் சண்பகம் செரீஇ”
-திருமுரு. 26-27

“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்”-குறிஞ் 75

“அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
 பெருந்தண் சண்பகம் போல”
-கலி. 150:20- 21

சண்பக மரம் தமிழ் நாட்டில் சில இடங்களில் வளர்கிறது. திருக்குற்றாலத்தில் இளவேனிற் காலத்தில் பூக்கின்றது. இதனைப் பாலைக்குரிய மலர் என்பர் . இதன் மலர் மஞ்சள் நிறமானது.