பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



271

ஆவாரை ஒரு குற்றுச்செடி. இதன் மலர் மஞ்சள் நிறமானது. ‘விரிமலர்’ ‘ஆவிரை’ என்பதற்கேற்ப இப்பூவில் உள்ள ஐந்து (அல்லியிதழ்கள்) அகவிதழ்களை நன்கு விரித்து, இது மலரும். மலர் பொன்னையொத்த மஞ்சள் நிறமானது என்பர் புலவர்.

“பொன்னேர் ஆவிரப் புதுமலர்”-குறுந். 173 : 1

“அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி”
-கலி. 140 : 7


இதனைக் ‘களரிஆவிரை’[1] என்றதனால், சங்க நூல்கள் கூறும் ‘கள்ளிபோகிய களரியம் பறந்தலை’ என்ற வண்ணம் களர் நிலத்திலும் இது வளரும் என்ற உண்மை கூறப்படுகிறது.

இம்மலர் அகத்துறையில், மடல் ஏறுவான் சூட்டும் பூவெனக் குறிப்பிடப்படுகின்றது. ஆதலின், இப்பூவின் தொடர்புடைய இந்நிகழ்ச்சியைச் சங்கத் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு விளக்குவாம்.

காமம் மிக்க தலைவன் மடல் ஏறியாவது இவளை மணப்பேன் என்று சூளுரைப்பதுண்டு. பனை மடலால் குதிரையைப் போல ஓர் உருவத்தைச் சமைத்து, அதன் கழுத்தில், “அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு” (கலி. 138 : 8) பிணித்த மாலையும், மணியும் அணிவித்துத் தலைவியின் உருவத்தை ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்தி, அதன் மேல் யாவரும் அறிய நாணை ஒழித்து, அழிபடர் உள்ளமொடு மல்லர் ஊர் மறுகின்கண் இவர்ந்து ‘எல்லீரும் கேண்மின்’ என்று கூறிக் கொண்டு வருதலை மடல் ஏறுதல் என்பர். அங்ங்னம் அவன் மடலேறி வருவதைக் கண்ட ஊரினர் ‘இவன் மடல் ஏறும்படி செய்தவள் இத்தலைவி’ என்று அவளை அவனுக்கு மணம் முடித்து வைப்பர். இவ்வுண்மையை உணர்ந்த ஒரு தலைவன், பாங்கியற் கூட்டத்தை விழைந்தான். பாங்கியோ அவன் குறையிரத்தலை மறுத்தாள். அவளை நோக்கி ‘தலைவியை அடைவதற்கு மடலேறுதல் என்றதொரு பரிகாரம் உண்மையின், நீ மறுத்தமையாற் கவலாது மடலேறத் துணிகின்றேன்’ என்று கூறுவானாயினன் (கலி. 139). இவ்வாறு கூறியவன் மேற்கொண்ட செயலைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று கூறும். ‘பொன்னைப் போன்ற இதழ்களையுடைய ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக் கட்டிய பல நூல்களையுடைய

 

  1. க. நா. 301