பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

413

தலைவி கூற்றாகவும், தலைவன் கூற்றாகவும் அமைந்த இவ்விருபாக்களிலும் முல்லையின் முகை, வெள்ளிய பற்களாக உருவகஞ் செய்யப்படுகின்றது. கார் காலத்தில் பெய்த மழையினால் முல்லைக் கொடி பாதுகாக்கப்பட்டு, மலரத் தொடங்கும் என்பதும் இவ்விரு பாடல்களுக்கும் பொது. கார் காலத்தில் திரும்பி வருவதாகத் தன் தலைவியிடம் கூறி விட்டுப் பொருள் வேட்கையில், இளமையையும் பாராது, அவளைப் பிரிந்து சென்ற தலைவன் பருவம் வந்துழியும் திரும்பவில்லை. அதுவரை ஆற்றியிருந்த தலைவி, கார் காலம் தனது தனிமையைக் கண்டு “நகுமே தோழி” என்று நொந்துரைப்பதையும், பிரிந்து வந்த தலைவன் கார் காலத்தில் பூத்த முல்லைக்கொடி தன்னுடைய தனிமையைக் கண்டு சிரிப்பதாக வருந்தி “இது தகுமோ” என்று வினவி, “வாழியோ முல்லை” என்று முல்லைக்கு வாழ்த்துரைப்பதையும் காணலாம்.

மற்று, முல்லை முகையினைப் பல்வரிசைக்கு ஒப்பிட்டுக் கூறுமிடத்து, இளமை நிலையாமையைக் குறிப்பிடும் கலித் தொகைப் பாடலும் ஒன்றுண்டு.

தலைவியின் இளமை எழில் நோக்காது, பொருள் தேடும் வேட்கை மிகுதியால் அவளைப் பிரிந்து போக எண்ணுகிறான் தலைமகன். பிரிவுணர்த்தப்பட்ட தோழி அவனிடம் நெருங்கிக் களவுக் காலத்தில் அவன் தலைவியின் நலம் பாராட்டிக் கூறிய மொழிகளை நினைவுறுத்துகிறாள். “ஐய! நறிய முல்லையானது தன்னில் ஒத்த முகையை ஒக்கும்படி நிரைத்துச் செறிந்த எம் பல்லினுடைய முறையினையுடைய நுகர்ச்சிக்குரிய இளமைப் பருவத்தைப் பாராட்டினாய்! அன்றி, எம் பல்லின் பறிமுறையைப் பாராட்டினையோ? அதாவது எம் பல்லின் செறிமுறையைப் பாராட்டினாய், அன்றி அவற்றின் பறிமுறையை இளமை போகப் போக எம் பற்கள் முல்லை மலர்களைப் போல முதுமையடைந்து விழுந்து விடுமென்பதைக் (முதுமையை) கருதவில்லையே” என்கிறாள்.

“நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த
 செறிமுறை பாராட்டினாய் மற்றெம்பல்லின்
 பறிமுறை பாராட்டினையோ ஐய<”
-கலி. 22 : 9-11

முல்லையின் முகை காட்டுப் பூனைக்குட்டியின் பற்களுக்கு ஒப்பாய் (புறம். 017), கூரியதாய் இருக்கும். இதன் அரும்பு மாலையின் மலரும் என்பதை “முல்லை அரும்பு வாய் அவிழும்