பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

679

“கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்” -பரி. 19 : 76
“செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்” -சிறுபா. 167
“நெடுவரை மிசைய காந்தள் மெல்விரல்” -பொரு. 33
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் ” -குறுந். 167 : 1

மலை நாட்டுப் பெண்டிர் மலையைத் தொழுவது ஒரு மரபு. அம்மரபை வைத்துக் காந்தள் தொழுவதாகப் பாடினார்.

“கொடிச்சியர் கூப்பி வரை தொழுகைபோல்
 எடுத்த நறவின் குலையலங் காந்தள்”
-கலி. 40 : 11-12

காந்தள் முகை மகளிர் முன் கைக்கு அன்றி, பாம்பின் தலைக்கும் பொருத்தமாக உவமிக்கப்படுகிறது. காந்தள் பூவினை நுகர, ஒரு வண்டு அதனை ஊதியது. நீண்டிருக்கும் காந்தளின் துடுப்பு, பாம்பின் தலை போன்றிருக்க, அதனை அணுகி ஊதிய நீல நிறத் தும்பி “பாம்பு உமிழ் மணி” போன்று தோன்றிற்று, ஆசிரியர் பெருங்கண்ணாரின் கண்களுக்கு.

“சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள்
 நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி
 பாம்பு உமிழ் மணியிற் றோன்றும்”
-குறுந். 239 : 3-5

காந்தளை ஊதிப் பறந்து போன தும்பியைப் பார்த்த பாம்பு, தான் கக்கி வைத்திருந்த மணிதான் பறந்து போயிற்றோ என்று மருண்டதாகக் கூறுவார் நாகன் குமரனார்.

“நெறிகெட வீழ்ந்ததுன் அருங்கூர் இருள்
 திருமணி உமிழ்ந்த நாகம் காந்தள்
 கொழுமடல் புதுப்பூ ஊதும் தும்பி
 நல்நிறம் மருளும். . . . . . . .”
-அகநா. 138 : 16-19

காந்தள் பூவில் தாது நிரம்ப உகுமென்பதை விளக்குகின்றார் கபிலர். மேய்ந்து நின்ற செந்நிறப் பசு ஒன்று, எரியென மலர்ந்த காந்தள் செடியினைத் தன் கொம்புகளால் அலைக்கிறது. அதன் காது பசுவின் முகமெல்லாம் பரவி நிறம் வேறு ஆயிற்று.