பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

714

சங்க இலக்கியத்

களுக்கு, மடல், ஓலை, ஓடு, தோடு என்று பெயர். இதன் மலரில், மடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இவையன்றி, வேறு இதழ்கள் இல்லை. அகமடல்கள் நீண்டும், மஞ்சள் நிறமாகவும், நறுமணம் உடையனவாகவும் இருக்கும். இவற்றின் கட்கத்தில் ‘சோறு’ எனப்படும் மகரந்தத் தொகுதி இருக்கும். இதில் சாம்பல் நிறமான மகரந்தம் உண்டாகும். இத்தாது நறுமணமுடையது. இதனை மகளிர் தூவியும், பூசியும் களிப்பர். தாழையின் மலரைத் தலையில் சூடிக் கொள்வர்.

“தாதுதுகள் உதிர்த்த தாழையங் கூந்தல்” -அகநா. 353 : 19

தாழையின் மலர் ஒன்று கைக்கெட்டாத உயரத்தில் மடல் விரிந்துள்ளது. அதனைத் தன் தலைவிக்குச் சூட்டி மகிழ எண்ணிய தலைமகன், அவளைத் தனது கைகளாலே தூக்கி நிறுத்திக் கொய்யச் செய்தான் என்பதைக் ‘கைதை தூக்கியும்’ (நற். 349 : 3) என்றார் நல்வேட்டனார்.

தாழம்பூவின் மணம் கடற்கரைப் பாக்கத்துச் சிறுகுடியில் பரவியுள்ள புலால் நாற்றத்தைப் போக்குவதைப் புலவர்கள் கூறுவர்.

“. . . . . . . . . . . .வெண்பூத்தாழை
 எறிதிரை உதைத்தலின் பொங்கித்தாது சோர்பு
 சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலா மறுக்கும்
 மணங்கமழ் கானல். . . . . . . . ”
-நற். 203 : 4-7
“புலவுப் பொருது அழித்த பூநாறு பரப்பின் ” அகநா. 130 : 8

தாவரவியலில் பூக்களுக்கு ஓர் அடிப்படைக் கோட்பாடு உண்டு. பூக்கள் ஒரு செடியின் இலைகள் போன்றவை என்றும், பூவில் உள்ள புறவிதழ்களும், அகவிதழ்களும் நெருக்கமாக இணைந்து தோன்றிய இலைத் தொகுதிகளே என்றும் கூறுவா. இக்கொள்கையை வலியுறுத்துமாப் போலே உள்ளது தாழையின் மடல்கள் நிறைந்த தாழம்பூ. மேலும் இதன் மடல்களைத் தாவரவியலில் அகன்று நீண்ட செதில்கள் (Bracts) பிராக்ட்ஸ் என்று கூறுவர். இதன் கட்கத்தில் அடர்ந்து கிளைத்த மகரந்தக் கிளைகள் தாது உகுத்திருப்பதும் இக்கோட்பாட்டை வலியுறுத்தும்.