பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சங்க காலம்

தோற்றுவாய்

பண்டைத் தமிழர் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர் என்பதை முற்கால இலக்கியச் சான்றுகள், பிற்கால இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள், போன்றவை உணர்த்தி நிற்கின்றன. இவ்வாறு பண்டைத் தமிழர் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலத்தைப் பற்றிய கோட்பாடுகள் பல. எட்டாம் நூற்றாண்டு முதல் கி பி. 2, 3ஆம் நூற்றாண்டுகள் வரை சங்ககாலம் பற்றிய கருத்துகள் அறிஞர் உலகத்தில் உலா வருகின்றன. எனினும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டே சங்க கால எல்லையாகப் பெரும் பாலோரால் தமிழ் உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சங்க காலம் பற்றிய கருத்துக்களைக் கூறி அவற்றின் வழி கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவே சங்க காலமாக இருக்கலாம் எனத் துணிய வருவதே இக் கட்டுரை.

கி. பி. எட்டாம் நூற்றாண்டு

சங்க காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டினதாகலாம் எனக் கருத்துத் தெரிவித்தவர் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை என்பவர். தம் கருத்துக்கு அரணாக நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் இடம் பெறும்,

ஆடித் திங்கள் பேரிருட்பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமிஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி வண்ண உரைசால் மதுரையொடு அரைசு கேடுறும்

(சிலம்பு, கட்டுரை காதை. 133 . 136)