பக்கம்:சங்க கால மகளிர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


முடிவுரை:

இல்லற வாழ்க்கைக்கு வேண்டிய தலைவனைத் தானே நாடித் தேர்ந்தெடுக்கும் உரிமையினை முற்றிலும் சங்ககாலப் பெண் பெற்றிருந்தாள் என அறிகிறோம். சங்க இலக்கியத்தில் காணுந் தமிழ்மகள் பொருளியலில் மிக்க உரிமை பெற்றிருந்தாள் என்பதனைக் கண்டோம். மனை முதலாக, தலைவியாக, இல்லத்தைக் கட்டிக்காத்து ஆள்பவளாக அவளைக் கண்டோம்.

ஒரோ வழி பரத்தையரை நாடிச் சென்ற தலைவனும், தலைவி மாட்டுத் தான் கொண்ட காதல் உண்மையுடையது ஆதலின், மீண்டும் தலைவி வாழும் வீட்டிற்கு வருகிறான். தலைவி அவன்பால் ஊடிப்பேசும் பேச்சுகளில் அவளின் மனையுரிமை நன்கு விளக்கமுறும். தன் குறையை அறியும் தலைவனும் "என்பால் குற்றம் உளதானால் நீ என்னைச் சினந்து கொள்வதற்கு உரிமையுண்டு" என்று மொழிகின்றான்; தன் குற்றத்தை உணர்ந்து வருந்துகின்றான். தலைவி தன்னைப் பழித்துப் பேசினாலும், வன்மொழியே கூறினும், தான் பணிமொழியே பகர்கின்றான். இவையெல்லாம் தலைவி இல்லறத்தின் கண் பெற்ற ஏற்றத் தினையே பெரிதும் எடுத்துக்காட்டுவனவாகும்.

பிற்காலப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பெண்களின் உடல் வருணனையினைச் சங்க இலக்கியங்களில் அருகியே காணலாம். பெண்ணின் உள்ள இயல்பே-மனப்பண்புகளே உளவியல் நுட்பமே (Psychology) நன்கு விளக்கப்பெறும். பெண்கள் உயர்ந்த கற்போடும் குற்றமற்ற பண்பாட்டோடும் யாண்டும் (எங்கும்) இணைத்துப் பேசப்பட்டிருப்பதனைக் காணலாம்.

"ஒருவன் சிறந்த மனிதனாவதற்கு மனிதனின் மூளை, பெண்ணின் இருதயம், குழந்தையின் உணர்ச்சி ஆகிய மூன்றும் தேவை" எனக் கூறியிருக்கிறார் மறைந்த மாமேதை இராஜாஜி அவர்கள்.