பக்கம்:சங்க கால மகளிர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சமமாவள்”[1] என்று திருவள்ளுவர் கூறிய கருத்தினை நினைக்க வேண்டியுள்ளது. மேலும் தாம் விரும்பிய ஆடவரையே கற்புடைமை பிழையாது குறிஞ்சி நில மகளிர் மணக்கின்ற காரணத்தால்தான் மலைவாழ்நர் வேட்டை தப்பாது வாய்க்கின்றது என்று சொன்னாள். “கணவரைத் தொழுது எழும் அவரது கற்புச் சிறப்பினால்தான், வேட்டு விச்சியரின் அண்ணன்மாரும், தாம்வைத்த குறி தப்பாது கணை செலுத்தும் ஆற்றலை உடையவராயிருக்கின்றனர்” என்று குறிஞ்சிக்கலி கூறும் குறிப்பு உற்றுநோக்கி யுணரத்தக்கது.

காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார், கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்

தாம் பிழையார் தாம்தொடுத்த கோல்.[2]

முல்லை நில மகளிரும் தாம் விரும்பிய ஆடவரையே மணந்து கொள்கின்றனர். ஆயமகளிர் காதலித்தவர் ஒருவரும், கைபிடிப்பவர் பிறிதெ ருவராகவும் அமையும் இருமணத்தினை, உலகமே பரிசாகக் கிடைப்பதாக இருந்தாரும் ஏற்றுக்கொள்ள மாட்டாத இல்லற நெறியினர் என முல்லைக்கலி முழங்குகின்றது.

வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முட் புணர்ந்த
ஒருமணந் தான் அறியும், ஆயின் எனைத்தும்

தெருமரல் கைவிட் டிருக்கே அலர்ந்த

  1. “தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை” -திருக்குறள்: 55.
  2. குறிஞ்சிக்கலி: 3:15-18