பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

களால் நாங்கள் உடற்சோர்வும் உள்ளச் சோர்வுமின்றி உண்டு வாழவல்லோம். 'உண்ண உணவு உண்டேல், பருக நீருண்டோ?' என நீங்கள் பகரவும்கூடும். ஆம்! ஆம்! நீங்கள் நினைக்கவும்கூடும். பாரியின் மலை ஆகாயத்தைப்போன்றது. அவ்விண்ணில் விளங்கும் மீன்களைப் போன்றவை, இப்பறம்பில் காணப்படும் சுனைகள் என்றால், நீர்ச்சுனைகளின் மிகுதிப்பாட்டை இதற்கு மேலுமா இயம்ப வேண்டும்! நீங்கள் கொணர்ந்த வேழத்திரளையும், தேர்க் கூட்டத்தையும் நான் காண்கின்றேன். அவ்யானைகளைக் கொணர்ந்து இப்பறம்பு மலையின் மரங்கள் தோறும் கட்டியுள்ளதையும் காண்கின்றேன். தேர்த்திரளினைத் திசைகள் தோறும் நிறுவியுள்ளதையும் காண்கின்றேன். இத்தப் படைப்பெருக்கைக் கொண்டு எங்கள் பாரியை நீங்கள் வெல்ல இயலாது. பறம்பையும் கொள்ள முடியாது. உங்கள் முயற்சியும் பயன் தராது. நான் ஒன்று கூறுகிறேன். அதன்படி நடவுங்கள். அப்படி நடந்தால் உங்கட்குப் பறம்பு கிடைக்கும். அப்பொழுதும் பறம்பு நாடு கிடைக்கமாட்டாது. அந்நாடு முந்நூறு ஊர்களையுடையதுதான். என்றாலும், அம் முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பாடி வந்து பெற்றுப் போயினர். இப்பொழுது இருப்பவர்கள் பாரியும் யானும் இக்குன்றுமே ஆகும். உங்கட்கு இக்குன்று வேண்டுமாயின், நரம்பினைக்கொண்டு யாழினைப் பண்ணுங்கள். நீங்கள் பரிசிலர் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். விறலியரும் உம் பின் வரப் பார்த்துக்கொள்ளுங்கள். இம்முறையில் "பரிசில் தா," என எங்கள் பாரியை வேண்டுங்கள்: இவன் இக்குன்றை யீவன்," எனக் கூறினார் என்