பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்றுத் திரும்புவாராக என்பதன் பொருட்டு, விறலி ஒருத்தியைப் பார்த்து, “மென்மையான சாயலைப் பெற்ற விறலி! உனக்கு ஆய் அண்டிரனைத் தெரியுமோ? அவனைத் தெரியாமல் எவரும் இருக்க இயலாது. அவனைத் தம் கண் முன் கண்டிலராயினும், செவியால் அவனது இசையினைக் கேட்டிருப்பர். நீயும் அவர்களைப்போலக் கண்ணால் காணாது, செவியால் அவன் புகழ் கேட்டவள் என எண்ணுகிறேன். நீ அவனைக் காணவேண்டுமானால், நேரே அவனைச் சென்று காண். அவன் மாரிபோல வரையா வண்மையுடையவன். உனக்கு வேண்டுவன தருவன்,” என வழிகூட்டி அனுப்பினர்.

முடமோசியார் அண்டிரனைக் காணல்

இங்ஙனம் ஆய் அண்டிரனைப் பாராட்டிய உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் தாமே நேரில் சென்று வள்ளலைக் கண்டார். கொடை வள்ளலைக் கண்டதும் என்ன கூறுவது என்பதும் உணராதவராய், இவனை நோக்கி முதலில் இவனது ஈரத்தினும் வீரத்தினையே புகழ விருப்பங்கொண்டவராய், “பகைவரது மாறுபாட்டை வென்ற உரம் படைத்த உத்தமனே,” என்றார். மேலும், இவனை நோக்கி, “யாவரும் ஒருசேரப் புகழும் நாட்டையுடை யோனே,” என்றும் புகழ்ந்தார். “இதற்கு மேல், அண்டிர! யானும் என் விறலியுமாகப் புறப்பட்டு வந்தனம். என்னுடன் வந்த விறலியோ நல்ல உடல் உரம் படைத்தவள் அல்லள். உடல்வளைவைப் பெற்றவள். அடியிட்டு நடக்கும் மெல்லிய நடையினள். இத்தகையவளோடு நான் வந்த வழியும் நேரிய வழியன்று; புலி இயங்கும் நெறி.