பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

“தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற்பொருட்டு,” என்னும் கருத்துக்கு இணங்கக் கொடுத்து வந்தவன். இப்படித் தன் நாட்டை அந்தணர்கட்கு ஈந்தும் தான் மூவேந்தர்பால் பெற்ற பொருளைப் பரிசில் கேட்டார்க்கு ஈந்தும், காரி வாழ்வு நடத்தினால், தனக்கென ஒன்றையும் பெற்றிலனோ எனில், அவனுக்கென உரிமையாக அமைந்தவள் அருந்ததி அனைய அவனது இல்லக் கிழத்தியே அன்றி வேறு எவரும் இலர். வேறு எதுவும் இன்று. இப்படி அன்றோ வாழ வேண்டும்! இத்தகையோனையன்றோ புலவர் உலகமும் பொது மக்கள் உலகமும் புகழும்.

மலையமான் திருமுடிக்காரி பிறர்போலத் தான் கள்ளுண்டு மயங்கிய காலத்து மகிழ்ச்சியால் ஈயும் இயல்பினன் அல்லன். தான் மதுவுண்டு மயங்காது இருக்கின்ற காலத்தும் மகிழ்ந்து ஈயவல்லவன். இப்படி இவன் ஈய வாங்கிச் சென்றவர் தொகை எண்ணில் அடங்காது. இவர்களை ஓர் உவமை கூறி விளக்க வேண்டுமாயின், இவர்கள் முள்ளூர் மலையின் உச்சியில் விழுந்த மழைத் துளியினும் பலராவர். இதனால், காரியின் ஈகை இயற்கையில் இவனுடைய பிறவிக் குணத்தால் அமைந்த ஈகையே அன்றிப் பிறரைப் போலச் செயற்கையால் அமைந்த ஈகை அன்று. இவனைப் பாடிச் சென்றவர் வெறுங்கையினராய் மீளுதல் அரிது. இவனைக் காணப் புறப்பட்டவர்கட்கு நல்ல நாளாக அல்லாமற்போயினும், நிமித்தங்கள் தீயனவாகத் தோன்றித் தடைக்குறிகளைக் காட்டுவனவாக இருந்த போதிலும், பரிசில் மாக்கள் இவனைக் கண்டு பாடிய மாத்திரையில் பரிசில் பெற்றே மீள்வர்.”